(கிருஸ்ணா,மா.சசி)
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட புதுமண்டபத்தடியில் நிலையான விவசாய வள நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 32 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஒக்ஸ்பாம் ஊடாக சர்வோதயம் இதற்கான நிர்மாணப்பணியை மேற்கொண்டது.
இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சர்வோதயம் அமைப்பின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் தலைவர் என்.எம்.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சிவலிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் வவுணதீவு பிரதே செயலாளர் தவராசா,ஒக்ஸ்பாம் அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையம் ஊடாக விவசாயிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படும்.
அத்துடன் நவீன விவசாய துறை தொடர்பிலான பயிற்சிகள்,சந்தைப்படுத்தும் வசதிகள்,நெல் கொள்வனவு நடவடிக்கை போன்ற சேவைகளை இவற்றின் மூலம் விவசாயிகள் பெறக்கூடியவாறு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைய திறப்பு விழாவின்போது சர்வோதயம் அமைப்பினால் உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல் நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.












