(தீரன்)
சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் கலாச்சாரப் பேரவை அக்னி இசைக்குழுவுடன் இணைந்து நடாத்திய கலாமன்றங்களின் கலைச்சங்கம நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நேற்றைய தினம்(27.04.2013)செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கலைச்சங்கம நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச கலாமன்றங்களின் கலை,கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், செங்கலடி அக்னி இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் சயலொளி பவன் குழுவினரின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் கலாசார கீதம் இசைக்கப்பட்டதுடன், கொம்மாதுறை விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களின் தேவாரம், வில்லுப்பாட்டு செங்கலடி எல்லைநகர் சரணி கலைக்கழக்த்தின் நாடகம், கொம்மாதுறை சிவாஞ்சலி நாட்டிய கலைக் கூடத்தின் நடனம், வந்தாறுமூலை சாயி இசைக்குழு மாணவிகளின் சிலம்பாட்டம், பாடல், பலாச்சோலை பாரதி கலைக்கழகத்தின் வசந்தன் கூத்து, களுவன்கேணி நாகஜோதி கலைக்கழகத்தின் கோலாட்டம்,நடனம், சேனையூர் குமாரவேலியார் கிராமம் தேனக கலாமன்றத்தின் தாளலயம் நிகழ்ச்சி என பல நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அக்னி இசைக்குழுவின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இசைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் கௌரவ விருந்தினராக ஏறாவூர் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் Y.M.G.W.S.K. கொடகும்புற அவர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக தன்னாமுனை மியானிநகர் பணிப்பாளர் அருட் தந்தை என்.இருதயராஜ் அவர்களும், ஏறாவூர்-04 கிக்கடுவ சோமரெத்தின தேரர் அவர்களும், செங்கலடி வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயகுரு சிவஸ்ரீ.ச.கு.சிவாதரசர்மா அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார இணைப்பாளர் திரு.த.மலர்செல்வன் அவர்களும் கலந்துகொண்டதுடன் அழைப்பு அதிதியாக ஓய்வுபெற்ற இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.சீ.தெய்வநாயகம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கிராமசேவையாளர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






























