(ச.சுரேந்திக்கா)மண்முனை மேற்கு,வவுணதீவு பிரதேச செயலளர் பிரிவில் "தேசத்திற்கு மகுடம்" அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 19 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கும் நெற்களஞ்சியசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு அரசடிச்சேனை கிராமத்தில் நேற்று இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதமஅதிதியாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு முதலாவது அடிக்கல்லிலை நட்டுவைத்தார்.
இந் நிகழ்வின்போது உரையாற்றிய பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள், இந் நெற்களஞ்சியசாலை அமைக்கப்பட்டால் இப் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் பெரும் நன்மையடைவர். இவர்கள் கடந்த காலங்களில் அதாவது தற்போதுவரை வெளி இடங்களில் இருந்துவரும் வியாபாரிகளுக்கு நிர்ணகிக்கப்படாத குறைந்த விலைக்கே நெல்லை விற்பனை செய்து வந்துள்ளனர். இத் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கு நெற்களை கொடுத்து கூடிய இலாபத்தை அடைய முடியும். மேலும் இந்த களஞ்சியசாலையினை எதிர்காலத்தில் ஈச்சந்தீவு கன்னங்குடா ப.நோ.கூ.சங்கம் செயற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், இந்த நெற் களஞ்சியசாலை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் திக்கோடை, பட்டிப்பளை, வவுணதீவு, கரடியனாறு, கிரான், வாகரை போன்ற இடங்களில் 6 களஞ்சியசாலைகளை ஏறக்குறைய 120 மில்லியன் ரூபா செலவில் எமது அரசாங்கம் இந்த மாவட்ட மக்களின் நன்மைகருதி அமைத்துக் கொடுக்கவுள்ளது. எமது இந்த அரசாங்கத்தினால் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அப் பணிகள் மக்களின் தேவைகளைக் உணர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது. யாராலும் சொல்லமுடியாது அபிவிருத்திகள் நடக்கவில்லையென்று. இப் பிரதேச மக்களின் நிலையினையும், கிராமங்களின் நிலையினையும் நன்கு உணர்ந்தவன் நான், ஒருபோதும் எமது இந்த அரசாங்கம் உங்களை கைவிடாது.
என அவர் தெரிவித்தார்
இந் நிகழ்வில் ஈச்சந்தீவு கன்னங்குடா ப.நோ.கூ.சங்க பொது முகாமையாளர் திரு.பரமானந்தம், மீள்குடியேற்ற பிரதியமைச்சின் பணிப்பாளர் கே.சத்தியவரதன் மற்றும் கட்டிட பொறியியலாளர், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.























