5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் அளிக்கம்பை பாடசாலையும் அபிவிருத்தியடைய உள்ளது.

 (உ.உதயகாந்த்)
நாடு முழுவதுமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில்  திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வானது அண்மையில் பாடசாலையின் அதிபர் திரு.துரை.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

அண்மைக்காலமாக எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அளிக்கம்பை கிராமமானது  வரலாறு காணாத அபிவிருத்திகளை கண்டு வருகின்ற நிலையில் இங்கு குடியேற்றப்பட்ட நாள் முதல் இக் கிராமத்திற்கு   எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி இருந்து வருவதை நீங்கள் யாவரும் அறிந்த விடயமாக இருப்பதுடன்  நான் இப் பிரதேச செயலாளர் பிரிவில் கடமை ஏற்று வந்த நாள் முதல் உங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன அவர்களின் முழு ஆதரவுடனும்   மின்சாரம் , குடிநீர் , சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட  பாதைகள் , பாலர் பாடசாலைகள், ஆலயங்கள் என பல  விதமான அபிவிருத்திகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் இன்னும் இப் பாடசாலைக்கான கணணி கூடத்தினையும் எதிர்காலத்தில்  பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையுடன் அமைப்பதற்கான ஏற்பாட்டு முயற்சியில் தொடர்ந்தும் இருப்பேன் என இந் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர் திரு .வே.ஜெகதீசன் தனது உரையில் கூறிவைத்தார்.


மேலும் இந் நிகழ்வில்  அருளாலராக அருட்பணி யோசப் மேரி அடிகளாரும் , பிரதம அதிதியாக திகாமடுல்லை பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன மற்றும் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு .வே.ஜெகதீசன் அவர்களும் விசேட அதிதிகளாக கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன், பட்டதாரி பயிலுனர் திரு.எல்.திருமுருகன் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்விலும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் மாணவர்களும் , ஆசிரியர்களும், பெற்றோர்களும், பாடசாலையின் நலன்விரும்பிகளும்  கலந்து சிறப்பித்தார்கள்.