கிரான் பிரதேசத்தை உள்ளடக்கிய புதிய பிரதேசசபையினை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கோறளைப்பற்று தெற்கு (கிரான்) எனப் பெயரிடப்பட்ட புதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கான பிரேரனைகளை ஆராய புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என்ற பெயரில் புதிய பிரதேச சபையினை வகுத்து உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இப்பிரதேச சபையினை உருவாக்கும் பொருட்டு மூவர் அடங்கிய குழுவொன்றை மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் நியமித்துள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்குத் தலைவராக கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவின் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி என் சத்தியானந்தியும் குழுவின் உறுப்பினராக மட்டக்களப்பு நில அளவைத் திணைக்கள அத்தியட்சகர் எம்.எம்.காமினி வீரசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள குழு புதிய பிரதேச சபையினை உருவாக்குவதற்கான பிரேரனைகளை ஆராயவுள்ளது. இப்புதிய பிரதேச சபை கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை பிரிவின் ஒரு பகுதியையும் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை பிரிவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
மேலும், இக்குழுவானது உருவாக்கவிருக்கும் புதிய பிரதேச சபையினது எல்லையினுள் உள்ள குடிமக்களின் வாழ் வசதிகளுக்காக அப் பிரதேச சபையினது எல்லைகளையும் தீர்மானித்துள்ளது.
மேலும் அபிவிருத்தி, பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் எண்ணிக்கை, அருகாமையில் உள்ள ஏதாவது உள்ளூராட்சி மன்றங்களை பாதிக்குமா போன்ற விடயங்களில் இக்குழு ஆராயவுள்ளது.
இதற்கமைவாக பொதுமக்கள் மற்றும் ஏற்புடையதான பொது நிறுவனங்களிடமிருந்தும் பிரேரணைகளை எழுத்து மூலம் 2013.06.17ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
பிரேரணைகளை, கே.தனபாலசுந்தரம்,கோறளைப்பற்று தெற்கு எனப் பெயரிட்டு புதிய பிரதேச சபை உருவாக்கத்திற்கான குழுவின் தலைவரும் பிரதேச செயலாளரும் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.


.jpg)










