வடக்கு தேர்தலில் த.தே கூட்டமைப்பை தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஆதரிக்க வேண்டும் - சந்திரநேரு


வட கிழக்கு தமிழர்களுக்கான ஒரு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் பணி இன்று வட மாகாண தமிழர்களிடம், வட மாகாணசபை தேர்தல் என்ற வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக அணுகி தமிழர்களின் உரிமைகளை மீட்க தமிழ் தேசிய கூட்டமைப்பை அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
அந்த அறிக்கையில்;
13வது திருத்த சட்டம் தமிழர்களுக்கான தீர்வாக ஒரு போதும் அமைய போவதில்லை. ஆனால் வட மாகாண சபையினை கைப்பற்றி 13க்கு மேல் சென்று அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் இனி மாகாண சபைக்கான அதிகாரக்குறைப்புக்கு இடம்வழங்கப்படாது. இதற்கான ஆணையை வட மாகாண மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும். சிறந்த தலைமையை தெரிவதற்க்கு சில நாட்கள் சென்றாலும், சிறந்த தலைமையின் கீழ் சிறந்த வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளர்கள். அனைத்து வடக்கு தமிழர்களும் ஓரணியில் இணைந்து வட மாகாண சபையை கைப்பற்ற வேண்டும். இத்தேர்தல் தமிழ் தேசியத்தையும், எமது உரிமையையும், இணைந்த வடகிழக்கினையும், சுதந்திரத்தை பெறுவதுக்கு கிடைத்த சந்தர்பம். எமக்கு உரிமை வேண்டும், எமது தேசியம் வேண்டும், எங்களது காணி எமக்கு வேண்டும், எம்மை நாமே ஆள வேண்டும். எமது நியாயமான போராட்டத்தின் வெற்றி, வெகு தொலைவில் இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்துவோம், எமது உரிமையை வென்றெடுப்போம்.

வாழ்க தமிழ்!

என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.