(தீரன்)
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் வான் ஒன்று பொலநறுவைப் பகுதியில் விபத்திற்குள்ளானதில் சாரதி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர்கள் வரையிலானோர்கள் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எஸ்.மனோகிதராஜ் தெரிவித்தார்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மன்னம்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் சமுர்த்தி பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த உத்தியோகஸ்தர்களே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர். இறந்தவர்களின் சடலம் பொலநறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கான தீவிர சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் சடலங்களை மட்டக்களப்பிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் ரீ.குணரெத்தினம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் கல்லாறைச் சேர்ந்த சுந்தரம் உதயகுமார், வாழைச்சேனை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். ஜீவரெட்ணம், வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி. மேனகா பாஸ்கரன்,ஆரையம்பதியைச் சேர்ந்த பேரின்பம் சபேசன் ஆகியோரே பலியாகியுள்ளனர்.
வாழைச்சேனையைச் சேர்ந்த வாகரை பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரான திருமதி. மேனகா பாஸ்கரன் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி பொலநறுவையில் நேற்று நள்ளிரவு இடம் பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்து 4 பேர் பலியானதுடன் மேலதிக சிகிச்சைக்காக கிரான் பிரதே சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வாமதேவன்,வாகன உதவியாளர் ஆகியோர், கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி விபத்து நடைபெற்ற இடங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் துரைரெட்ணம் ஆகியோர் பார்வையிட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபா பி.எஸ்.எம் சாள்ஸ் உட்பட மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள் என அனைவரும் பொலனறுவை மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து படங்களும் எங்களது இணையத்தளத்திற்கு உரித்தானவை அனுமதியின்றி ஏனைய இணையங்கள் பிரசுரிக்கவேண்டாம்








































