சந்நியாசிமலை உச்சியிலிருந்த வேலுக்கு முன்னால் புத்தர் !

பாணமையிலிருந்து 5 மைல் பயணித்ததும் சந்நியாசிமலை வருகிறது.
வள்ளியம்மனை மணந்து கதிர்காமத்தில் வாழ்ந்த முருகனைத் திருப்பி அழைப்பதற்காக கொங்கோட்டியார் சந்நியாசியார் கலாயாணகிரி ஆகிய மூவரையும் தெய்வானையம்மன் கதிர்காமத்திற்கு அனுப்பினார் என்றும்
பாணமையிலிருந்து வந்த சந்நியாசியார்  மேற்படி இடத்தில் அடங்கினார் என்றும் கொங்கோட்டியர் புத்தலையிலிருந்து 4 மைல்களுக்கு அப்பாலுள்ள மடத்தில் அடங்கினார். கல்யாணகிரியார் மட்டும் கதிர்காமம் சென்றார் என்பது வரலாறு .
உன்னரசுக்கிரி என்பது திருக்கோவிலின் தென்பாலுள்ள உகந்தைமலைக்கும் பாலர்நகைநாடு (பாணமை) என்ற பண்டைய துறைமுகத்திற்குமிடையே இருந்திருக்கின்றது. அதனாலும் வேறு சான்றுகளாலும் தற்காலம் சன்னாசிமலை  என்ற பெயருடன் வழங்கப்படுகின்றது என மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

சந்நியாசிமலை பாணமைக்கும் உகந்தைக்கும் இடையே அமைந்துள்ளது.
அங்கு  யாத்திரை செல்வோர் புத்திர பாக்கியம் இல்லாதோர் இருப்பின் சந்நியாசியையும் தமது கோரிக்கையையும் நினைந்து இம்மலையில் கல் தூக்கி வைப்பர் என்றும் தமது கோரிக்கை நிறைவேறின் அடுத்த பயணத்தின்போது பொங்கலிட்டு ஏற்றிய கல்லை இறக்கிவைப்பர் என்றும் கூறுவர்.
உகந்தைமலை முருகனிடம் செல்வோர் இவ்விடத்தில் இறங்கி வழிபட்டு;ச் செல்வது தொன்றுதொட்டு வழமையாகிறது.
தற்போது அம்மலையிலுள்ள வேலுக்கு முன்னால் புத்தர்சிலை வைக்கப்பட்ட சிறு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. வீதியால் பயணிப்போருக்கு வேல் தெரியாது.புத்தர் சிலையே தெரியும்.

உகந்தை மற்றுமொரு கதிர்காமமாக மாற்றப்படும் முஸ்தீபுகள் எடுக்கப்பட்டுவரும் இந்நிலையில் இந்நிகழ்வு கட்டியம் கூறுவதுபோல் உள்ளதல்லவா?.