சிறப்பு பொருந்திய மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தம்!(வீடியோ,போட்டோ)

(தீரன்)
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன் பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

இந் நிகழ்வு இவ் வருடம்  06.07.2013 செவ்வாய்க்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் பூசம் நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.



இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே!  அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள்,தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும் அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.

திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய காலமாகும்.

மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால்!!!

மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து, அப்போது அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

இவ்வாறு சிறப்பு பெற்ற ஆடி அமாவாசை தின தீர்த்தோட்சவம் இராமாயண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தீர்த்தம், தலம், விருட்சம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்டு பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்து வரும் மாமாங்கேஸ்வரர் ஆலயம் தானாக தோன்றியதன் காரணமாக சுயம்பு ஆலயமாகவும் போற்றப்பட்டு வருகின்றது.

இராவணேஸ்வரனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணன் அனுமானின் வாலில் கொழுத்திய தீயை அணைத்த இடமாகவும் ஆலயம் சிறப்பு பெற்றது.

இராமபிரானின் தண்டாயுதத்தால் உருவான தீர்த்தக்கேணியே மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியென கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இந்த தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த தீர்த்த உற்சவத்தில் விசேடமாக பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வு சிறப்பு பெறுகின்றது.

தாய், தந்தையர்களை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிதிர்க்கடன் செலுத்துதல் இந்த தீர்த்தத்தின் சிறப்பாகும்.