மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஆசிரியர்கள் தமது திறமைகளை வெளிக்கொணரவேண்டும்- கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர்

'தற்போது நம்மில் அதிகமானோர் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் புத்தகங்களை நம்பியிருக்கின்றோம். எதிர்காலத்தில் இந் நிலை மாறவேன்டும். வெளி இடங்களில் இருந்து இறக்குமதியாகும் புத்தகங்களை நம்பியிராமல் இங்குள்ள சிறந்த ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் எமது மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிப் புத்தகங்களை உருவாக்கவேன்டும்.'

என கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார். நேற்று 21ம் திகதி கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இவர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ் வலயத்திலுள்ள ஆசிரியர்கள் இங்குள்ள மாணவர்களுக்குத் தேவையான நூல்களை  வெளியிடுவது அரிதான விடயம். இந் நிலை எதிர்காலத்தில் மாறவேன்டும். இக் கல்வி வலயத்தில்  மிக சிறந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஏன் இந்த கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் கூட சிறந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். கடந்த க.பொ.த.சாதாரண தரப் பரிட்சையில் இந்த பாடசாலை விஞ்ஞானப் பாடத்தில் நூறு வீதம் பெறுபேற்றினைப் பெற்று எமக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த விஞ்ஞான பாட ஆசிரியரை நான் பாராட்டுகின்றேன்.

ஒவ்வொரு ஆசிரியர்களிடமும் ஒவ்வொரு திறமை இருக்கின்றது. இதனை வெளிக்கொண்டுவரவேன்டும். இன்று இங்கு நூலினை வெளியிட்டுவைத்த ஆசிரியர் ஏனைய ஆசிரியர்களுக்கு ஒர் முன்மாதிரியானவர். நூல் வெளியீடுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய திட்டங்களுக்கு எப்போதும் நான் உட்பட எமது வலய கல்வி அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்க என்றும் தாயாராக இருக்கின்றனர்.

என தனது உரையில்  தெரிவித்தார்.