
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று சொல்வார்கள். சாமான்ய மக்கள் தமது இஷ்ட தெய்வங்களாக வழிபடும் கிராமிய தெய்வங்களின் ஆலயங்களாயினும் சரி,சரித்திரப் புகழ் பெற்ற பெரிய பெரிய ஆலயங்களாயினும் சரி குறைவின்றி அமையப் பெற்றது எம் மட்டு மாநகர். கடந்த இரு மாதங்களில் தாந்தாமலை முருகன் ஆலயம் , மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் , சித்தாண்டி முருகன் ஆலயம் , மண்டூர் முருகன் ஆலயம் என வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வருடாந்த மஹோற்சவங்கள் பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. அந்த வரிசையில் அடுத்ததாக மேலும் இரு சிறப்பு மிக்க ஆலயங்களின் வருடாந்த உற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருவதோடு அதன் நிறைவுக் கட்டத்தையும் எட்டியுள்ளன. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் மற்றும் வெருகல் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் என்பனவே அவ்விரு ஆலயங்கலாகும்.
இவ்வாலயங்களின் உற்சவ இறுதி நாட்களில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையம் ஒழுங்கு செய்துள்ள பாரதத்தின் மகிமை வாய்ந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்களில் பிரதிஷ்டையாகியுள்ள சிவலிங்கங்களின் தத்ரூப காட்சியினை கண்டுகளித்து ஆன்மீகப் பயனடையலாம் என்பது இங்கு கூடுதல் சிறப்பம்சமாகும்.
இங்கே உலகின் முதலாவது சிவன் ஆலயம் எனும் மகத்துவம் பெற்ற குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஆலயம், அதே குஜராத்திலுள்ள நாகேஸ்வரர் ஆலயம், மத்தியப் பிரதேசத்தின் மகிமை வாய்ந்த மகா காலேஸ்வரர், ஓங்காரேஸ்வரர் ஆலயங்கள், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பீமாசங்கர், கிருஷ்னேஸ்வரர், திரியம்பகேஸ்வரர் ஆலயங்கள், உத்தரப் பிரதேசத்தின் விஷ்வநாதர் ஆலயம், ஜார்கண்டிலுள்ள வைத்தியநாத் ஆலயம், இமய மலையிலுள்ள கேதாரநாத் ஆலயம், ஆந்திராவிலுள்ள மல்லிகார்ஜுனர் ஆலயம் மற்றும் தமிழ் நாட்டிலுள்ள இராமேஸ்வரம் போன்ற ஆலயங்களின் மூல மூர்த்திகளின் மாதிரியுருவை இங்கு தரிசித்து பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலே சோமநாதர், மஹாகாலேஸ்வரர், வைத்தியநாத் சிவலிங்கங்கள் கொக்கட்டிச்சோலைதான்தோன்றீஸ்வரத்திலும், ஏனைய 9 சிவலிங்கங்களும் வெருகல் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்திலும் 20/09/2013 முதல் 23/09/2013 வரை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளன. (மண்டூர் விதுஷகன்)












