'பாதகமான சூழ்நிலையிலும் உள்ளக அமைதியைப் பேணல்' விசேட கருத்தரங்கு


 (மண்டூர் விதுஷகன்)
மட்டக்களப்பு - மேற்கு கல்வி வலய உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களின் ஏற்பாட்டில்  'பாதகமான
சூழ்நிலையிலும் உள்ளக அமைதியைப் பேணல்' எனும் விசேட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது
                

அறிவியலின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும் இக்காலப் பகுதியில் ஆன்மீக விழுமியங்களும் எம் வாழ்விற்கு அத்தியாவசியம் என்பதை நாம் மறுக்க முடியாது. அந்தவகையில் மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஐ யோக நிலையத்திற்கு இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த சகோதரர்.திரு.விஸ்வநாதன் மற்றும் அவரது பாரியார் சகோதரி .திருமதி.லக்ஸ்மி விஸ்வநாதன் ஆகியோர் கடந்த இரு தினங்களில் நகரில் சில முக்கிய நிகழ்வுகளை நடத்தினர்.

   இந்தியாவில் ஹைதராபாத்திலுள்ள பிரபல தனியார்  நிறுவனத்தின் இயக்குனரான திரு.விஸ்வநாதன்B.Sc,B.Ed,MBA போன்ற பட்டப்படிப்புக்களை முடித்துள்ளதுடன் விழுமியங்கள் கற்கைநெறி துறையில் உயர்தர சேவைகள் வழங்கியமைக்காக "ராஸ்திரிய உத்யோக் ரத்னா" எனும் தேசிய விருது பெற்றவராவார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். திருமதி.லக்ஷ்மி அவர்களும் B.Sc, B.Ed ,PGD in Value Education & Spirituality  போன்ற துறைகளில் பட்டம் பெற்றுள்ளதோடு 25வருட உயர் கல்வி ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தற்பொழுது தமது சொந்த கம்பனியின் நிர்வாக பொறுப்புக்களை கவனித்து வருகிரார்.

 இவர்கள் இருவரும் இந்த ஆன்மீக அமைப்பில் இணைந்து கடந்த 17 வருடங்களாக ஆன்மீக சேவை செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 12 நாடுகளில் இவர்கள் ஆன்மீக விழுமியங்களைப் பற்றிய கருத்தரங்குகளை நடாத்தியுள்ளனர். தற்போது தமது இலங்கை விஜயத்தில் இரு நாட்களை மட்டக்களப்பிற்கு ஒதுக்கி இங்கு வருகை தந்துள்ளனர். 09.10.2013 திகதி அன்று மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்திலே உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வொன்றினை இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த சகோதரர் விஸ்வநாதன் நடாத்தினார். 'பாதகமான சூழ்நிலையிலும் உள்ளக அமைதியைப் பேணல்' என்ற தலைப்பில் இக் கருத்தரங்கு நடை பெற்றது.

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பாடசாலைளிலிருந்து 250  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டதுடன் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.என்.தயாசீலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன் அவர்கள் கடந்த வருடம் இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகத்தில்  இடம்பெற்ற முக்கிய பிரமுகர்களுக்கான நிகழ்வில் இலங்கை சார்பான பிரதிநிதியாக கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் 'பாதகமான சூழ்நிலையில் உள்ளக அமைதியைப் பெறுதல்' எனும் இதே தலைப்பில் அன்று மாலையும் மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லுரி மாணவர்களுக்கும் ஒரு கருத்தரங்கு நடாத்தப்பட்டது. கல்லூரி உப அதிபர் திருமதி;.புவனேஸ்வரி அவர்களது தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் 230 மாணவர்கள் கலந்து கொண்டனர். இங்கும் சகோதரர்.விஸ்வநாதன் அவர்கள் சிறப்பான ஒரு கருத்தரங்கை நடாத்தினார். 
அத்துடன் அதே தினம் மட்டக்களப்பு தாதிய பயிற்சிக் கல்லூரி, மற்றும் போதனா வைத்தியசாலை ஆகியவற்றிலும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.