வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி மேம்படுத்தல் கருத்தரங்கு

(Ravindramoorthy)பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 2013 ஆம் ஆண்டில் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான 'கல்வி மேம்படுத்தல்' கருத்தரங்கு வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் 21.09.2013 அன்று நடைபெற்றது.



1390 மாணவர்கள் கலந்து கொண்ட இக்கருதரங்கானது காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 4.30 மணி வரையில் நடைபெற்றது. இதனை கல்முனை றோஸ்ஸரிட்டீஸ் நிறுவனமும், கொழும்பு  அருள் ஸ்ரடி சேக்கிள் ஆசிரியர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர். இக் கருத்தரங்கிற்கான முழுமையான அனுசரணையை வழக்கறிஞர் வேலாயுதன் தேவசேனாதிபதி வழங்கியிருந்தார்.

20 வளவாளர் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இக் கருத்தரங்கில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, ஆகிய பாடங்களுக்கான பெறுமதிமிக்க கைந்நூல்களும் வழங்கப்பட்டன.

இக் கருத்தரங்கில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், வழக்கறிஞர் வே. தேவசேனாதிபதி, வித்தியாலய அதிபர் ச. கணேசமூர்த்தி, பட்டிருப்பு கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் எஸ். நடேசமூர்த்தி, வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ரோஸ் ஸரிட்டீஸ் நிறுவனத்தின் இணைப்பாளர்களான ச. ராஜீசன், ரிச்சர்ட் அன்ரனி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

பங்குபற்றிய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், இக்கருத்தரங்கு மூலம் தாம் பெரும் பயனடைந்ததாகவும் இது போன்று தரம் 5 மற்றும் உயர்தர மாணவர்களுக்கும் எதிர் காலத்தில் கருத்தரங்குகளை செய்ய வேண்டுமென ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டதுடன். இதனை நடாத்தி முடிப்பதற்கு வசதி செய்து கொடுத்த பாடசாலை நிருவாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.