2012ம் ஆண்டு பட்டம்பெற்ற அனைவரும் உள்வாங்கப்படுவார்களென அரசாங்க அதிபர் உறுதி-பா.அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012ம் ஆண்டு பட்டம்பெற்ற அனைவரையும் பதிவு செய்யுமாறு தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசாங்க அதிபர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012ம் ஆண்டு பட்டம் பெற்ற அனைவரையும் நாளைய(14.10.2013) தினத்திற்குள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்க அதிபர் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

2012.03.30ம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களை மட்டும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளைய(14.10.2013) தினத்திற்குள் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்க அதிபர் அவர்கள்  வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், 2012.12.31 பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை தொடர்பாக தன்னிடம்  பட்டதாரிகள் புகார்தெரிவித்தமை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது  அரசாங்க அதிபர் அவர்கள் 2012ம் ஆண்டு பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளையும் தான் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதில் மாத வித்தியாசங்கள் பற்றி கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதே நேரம் 2011ம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்யவேண்டிய சில பட்டதாரி மாணவர்கள் கிழக்கு பல்கலை கழகத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக தங்களது பரீட்சை முடிவுகள் பிற்போடப்பட்டதன் காரணமாக தாங்கள் சிறப்பு பட்டம்; பெற்றும் தங்களின் பட்டம்பெற்ற திகதி 2012.08.30 திகதிக்கு பின்தள்ளப்பட்டுள்ளதன் காரணமாக தாங்கள் இம்முறையும் பட்டதாரி பயிலுனராக உள்வாங்கப்படமுடியாத சந்தர்ப்பம் உள்ளதாக சிறப்புப்பட்டம் பெற்ற மாணவர்கள் சிலர் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் இது குறித்தும் தான் அரசாங்க அதிபருடன் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.