சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகம்

( சிவம் ) மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலை 20.1 வீதமாக உள்ள நிலையில் தேசிய மட்டத்தில் 8 வீதமாகவே காணப்படுகின்றது. இதைக் கருத்தில் கொண்டே சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வாறு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி; குணரெட்ணம் தெரிவித்தார்.



புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் கே. நவரஞ்சன் தலமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுய தொழில் அபிவிருத்தி கடன்களை வழங்கி வைத்து மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமுர்த்தி வங்கிகளில் பயனாளிகளின் குழு சேமிப்புப் பணம் 2000 மில்லியன் வைப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமுர்த்தி வங்கிகளிலும் இதுவரை 80,000 பேருக்கு 210, 750 மற்றும் 1000 ரூபாய் பெறுமதியான சமுர்த்தி உணவு முத்திரை வழங்குவதற்கு 55 மில்லியன் ரூபாய் மாதாந்தம் தேவைப்படுகின்றது. இதில் அரசானது 45 மில்லியனை மட்டுமே வழங்குகின்றது.

ஏனைய வர்த்தக வங்கிகளைப்போல் அதிக வட்டியை அறவிடாது 8 வீதமான வட்டியையே அறவிடுகின்றோம். ஜனசவிய திட்டத்தின் மூலம் வறுமை அகலாததன் காரணமாகவே சமுர்த்தி அறிமுகம் செய்யப்பட்டது எனத்தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ். கிரிதரன், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஜே. எப். மனோஜிதராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன்களை வழங்கி வைத்தனர்.