எமது சமூகத்தின் கல்விச் செல்வத்தை உயர்த்த சமூகப்பணியாற்றும் கல்வி அமைப்புக்கள் முன் வரவேண்டும் - மு.இராஜேஸ்வரன்

யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் கல்வி பாதாளத்திற்கு சென்றுள்ளது. கல்விப் பலத்தினால் இந்த நாட்டில் வலிமை பெற்று விளங்கிய தமிழர்கள் இன்று வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றனர். எமது இனம் இழந்த கல்விச் செல்வத்தை நாம் மீண்டும் உயிர்ப்பு பெறச்செய்து பலம் பெற வேண்டுமாயின் பாடசாலைகளில் மட்டுமன்றி கல்வி சார் சமூகப்பணியாற்றும் கல்வி அமைப்புக்களும் கடினமாக உழைக்க வேண்டும். அதற்கு நற்பிட்டிமுனை நெடா அமைப்பை யாவரும் உதாரணமாக கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

நற்பிட்டிமுனை நெடா அமைப்பு நடத்திய கல்வி முகிழ்ப்பு கலைவிழா நெடா அமைப்பின் தலைவர் க.ருத்திரமூர்த்தி தலைமையில் நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில்

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கல்விப்பணி, சமூகப்பணி என்பனவற்றை மேற்கொண்டு வரும் நெடா அமைப்பு சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி இலவசமாக வகுப்புக்களை நடாத்தி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது. இவ்வமைப்பு இன்னும் ஒரு படி மேலே சென்று சிறுவர்களுக்கு இலவசமாக ஆங்கில வகுப்புக்களை நடாத்தி வருவதுடன் அவர்களின் ஆற்றல்களை கல்வி முகிழ்ப்பு என்ற பெயரில் அரங்கேற்றி பெற்றோரின் மனங்களை குளிர்வடையச் செய்வதையும் காணலாம்.

எமது பிரதேசத்தில் கல்வி அமைப்புக்கள் சமூக நிறுவனங்கள் பல உள்ளன. இவை பெயரளவில் மாத்திரம் உள்ளமை வேதனை தரும் விடயமாகும். இவ் அமைப்புக்கள் நெடா அமைப்பை முன்னுதாரணமாக கொண்டு கல்வி பணியாற்ற முன்வரவேண்டும். ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி போதனை அளிக்க முன் வந்தால் எனது உதவி ஒத்தாசைகளை தேடி வந்து வழங்குவேன் என்றார்.