மட்டக்களப்பின் பிரதான வீதி வளைவுகளில் உரிய சமிஞ்சை குறியீடுகளை நிறுவுவது எப்போது ? சாரதிகள் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதிகள் அனைத்தும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மிகவும் சிறந்த முறையில் மக்கள் பாவனைக்கு உகந்தவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும்  பிரதான வீதி வளைவுகளில் உரிய வீதி   சமிஞ்சை குறியீடுகள் (சிவப்பு அம்புக்குறி)நிறுவப்படாதமையினாலும், வீதி விளக்குகள் இல்லாதமையினாலும் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்ததுடன் , அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு - கல்முனை மற்றும்  மட்டக்களப்பு - திருமலை  பிரதான மார்க்கங்களின் (பெரிய கல்லாறு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா, ஆரையம்பதி, ஊரணி, பிள்ளையாரடி, தன்னாமுனை, கிரான், கோரகல்லிமடு ) பிரதான வீதி வளைவுகளில் இரவு வேளைகளில் வீதி விளக்குகள் இல்லாதமையினாலும் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசங்களினாலும் பாரிய சிரமத்தினை சந்திக்க நேர்வதுடன், வளைவுகளில் உரிய சமிஞ்சை குறியீடுகள் தென்படும் சந்தர்பத்தில் வாகன சாரதிகள் முன்னால் வீதி வளைவு உள்ளது என்பதை கவனத்திற்கொண்டு வேகக்கத்தினை குறைத்து வீதி விபத்துக்கள் ஏற்படாவண்ணம் வாகனங்களை செலுத்தி உயிராபத்துக்களை குறைக்கலாமென கருதுகின்றனர்.

இவ் வீதி வளைவுகள்  தொடர்பான முறைப்பாட்டு விண்ணப்பத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுக சேவையாற்றிவரும் சமூக அமைப்பு ஒன்றின் மூலமாக கடந்த காலத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சமர்ப்பித்திருந்தும் இவ் விடயம் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தாமல் வளைவுகளில் காணப்படும் மின் கம்பங்களில் நான்கு கோடுகள்  இரண்டு வர்ணங்களில் நிறப்பூச்சு (water paint) பூசியிருந்தார்கள். ஆனால் தற்போது  இரண்டு நிறங்களும் மங்கி வெள்ளை நிறமாகவே காட்சியளிப்பதுடன் அதன் மேல் விளம்பரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

ஏனைய அபிவிருத்திகளில் உச்ச கட்டத்தினை அடைந்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டமானது ஏனைய மாவட்டங்களின் வீதி அபிவிருத்தியில் அங்கம்வகிக்கும் சமிஞ்சை குறியீடுகளை நிறுவுவதில் மாத்திரம் பின்நிற்பது ஏன் ? 

இவ் விடயத்தினை விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளும், எமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் முன்னின்று செயற்படும்  அரசியல் பிரமுகர்களும் கவனத்திற்கொண்டு  இக் குறைபாட்டினை நிவர்த்திசெய்து தருமாறு சாரதிகள் மிகவும் வினையமாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.