பெரும்போகச் செய்கை ஆரம்பித்த போதும் மாடுகள் வெளியேற்றப் படாமையினால் வயல்கள் பாதிப்பு.


(மா.சசி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் விவசாயச் செய்கை பண்ணப்படும் பகுதிகளில் இருந்து மாடுகள் வெளியேற்றப்படாமையினால் பாதிப்பேற்றட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிப்பு.

குறிப்பாக வவுணதீவப் பிரதேசத்தில் மாடுகள் வெளியேற்றப்படாமல் உள்ளதால் விதைத்த வயல்களின் வரம்புகள் சேதமடைவதுடன் பயிர்களையும் மாடுகள் அழிப்பதாக விவசாயிகள் பெரும்பாக உத்தியோகஸ்தர்களிடம் முறையிட்டுள்ளனர்.

வவுணதீவப் பிரதேச பெரும் போக விவசாயச் செய்கை தொடர்பான ஆரம்பக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற போது இவ் ஆரம்பக் கூட்டத் தீர்மானத்துக்கிணங்க செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வயல் வேலை ஆரம்பிப்பதாகவும் அத் தினத்துக்கு முன்னர் மாடுகளை விவசாயச் செய்கை பண்ணப்படும் பகுதியில் இருந்து மேச்சலுக்காக வெளியேற்ற வேண்டும் எனவும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி விதைப்பு ஆரம்பித்து ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் முடிவடைய வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் இதுவரை மாடுகள் வெளியேற்றப்படாமையினால் வயல்கள் சேதமடைவதுடன் பயிர்கள் அழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிப்பதுடன் தாங்கள் பெரும்பாக உத்தியோகஸ்தர்களிடமும் விவசாய அமைப்புக்களிடமும் ஆறையிட்டும் பயனளிக்கவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விவசாய அமைப்புத் தலைவர்கள் வட்ட விதானை போன்றோரிடம் தொடர்பு கொண்ட போது பண்ணையாளர்கள் சட்டத்தை மதிக்காமல் செயற்படுவதனால் குறித்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.