போரதீவுப்பற்று பிரதேச எல்லைக் கிராம பாடசாலைகயையும், பொதுமக்களையும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை

(ரவிப்ரியா & நடனம்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலகப் பிரிவில் வெல்லாவெளியில் உள்ள எல்லைப் பிரதேசங்களான மண்டூர்- 35ம் கிராமம் மற்றும் சின்னவத்தை ஆகிய இடங்களில் இயங்கும் பாடசாலைகள் காட்டு யானைகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் உயிராபத்துடன் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளதாகவும் பாடசாலைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்காவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளாh.


இதனால் இப்பகுதி மாணவர்களும் ஆசிரியர்களும் அச்ச உணர்வுடனும் பதற்றத்துடனும் கல்விச் செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களின் கல்விச் செயற்பாடகள் பாதிப்படைவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் யானைகள் வந்திருக்கின்றதா என்பதை அவதானித்து வெடிகள் கொழுத்தி யானைகளை விரட்டிய பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்கவும் வேண்டியுள்ளது.


எனவே இத்தகைய இடர்பாடுகளில் இருந்து மாணவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்டு யானைகளைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளாh. இதே கோரிக்கையை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தனிடமும் நேரடியாக விடுத்துள்ளார்.

அதேவேளை, போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் யானைகளின அட்டகாசத்தினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகிவருவதுடன் தங்கள் இருப்பிடங்களில் வசிப்பதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக பலாச்சோலை,சின்னவத்தை,மாலையர்கட்டு,காக்காச்சிவட்டை 35ம் கொளனி ,38ம் கொளனி இறக்கத்துவட்டை உட்பட பலபகுதிகளில் நாளாந்தம் யானை கிராமத்திற்குள் புகுர்ந்துஅட்டகாசத்தினைச் செய்துவருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே வேளை கடந்தவாரம் சின்னவத்தைப் பகுதியில் 55 வயதுடைய பெண்ஒருவர் மற்றும் 65 வயதுடைய வயோதிபர் ஒருவரும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனைக் கருத்தில் கொண்டு தங்களுக்கான பாதுகாப்பை வழங்க உரியவர்கள் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.