அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் பிள்ளைநேயம் தொடர்பான செயலமர்வு

(மன்சூர்)
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரையுடனும், யுனிசெப் நிதியுதவியுடன் பிள்ளைநேய முறைமைகள் தொடர்பான செயலமர்வுகள் கடந்த இரண்டுவாரங்களாக நடைபெற்றன. இந்த செயலமர்வுகள் யாவும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளரும், யுனிசெப் இணைப்பதிகாரியுமான எஸ்.எம். ஜெமீல் தலைமையில், ஆரம்பக்கல்வித்துறை சார்ந்த பயிற்சி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் கட்டுறுப் பயிலுனர் (மூன்றாம் ஆண்டு ஆசிரிய மாணவர்)களுக்கும், இரண்டாம்வருட உள்ளகப் பயிற்சிபெறுகின்ற ஆசிரிய மாணவர்களுக்கும், மற்றும் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் இரண்டாம்வருட பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

செயலமர்வுகள் தொடர்பான கற்பித்தல் பயிற்சிகள் அக்கரைப்பற்று காதிரியா வித்தியாலயத்திலும், பிள்ளைநேயம் தொடர்பாக மாணவர்களது கற்றல் செயற்பாடுகள், மாணவர்களினால் சிறந்த முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள காலை ஆராதனையையும் நேரடியாகக் களப்பயணமாக மேற்கொண்டு அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்திலும் காண்பிக்கப்பட்டன. அத்துடன் பிள்ளைநேயம் தொடர்பான விசேட பயிற்சிப் பட்டறைகள், தேர்ச்சிமையக் கலைத்திட்டம் தொடர்பான விளக்கங்கள், தேர்ச்சியடிப்படையில் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள், கணிப்பீட்டு முறைமைகள், பரிகாரக் கற்பித்தல் தொடர்பான விளக்கங்கள், பரிகாரக் கற்பித்தலுடன் தொடர்பான உபகரணப் பயன்பாடுகள், கற்றல் கற்பித்தலில் பிரதான பங்கினை வகிக்கும் கற்றல் உபகரணம் தொடர்பான பயிற்சிகள், செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்ச்சித்திட்டம், பிள்ளையறிவோம், முதன்மை நிலைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விளக்கங்கள் போன்றனவும் சிறப்பான முறையில் செயலமர்வின்போது விளக்கமும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இப்பயிற்சிகள்யாவும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மண்டபங்களில் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல். காசீம், கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் எம்.எஸ்.ஏ.ஹபீழ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். அகமட் கியாஸ், உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.ஏ. அபுதாஹிர், எம்.எல்.எம். லாபீர், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர், ஏ.எல்.எம். முஸ்தபா, என்.சம்சுதீன், வளவாளர் திரு. தி. ரவி (அதிபர்) மற்றும் கல்விக் கல்லூரி விரிவுரையாளர்களினாலும் ஆசிரிய பயிலுநர்களுக்கு முழுநாள் பயிற்சிக்களமாக பயிற்சிகளும் விரிவுரைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் விசேட அதிதியாக கிழக்கு மாகாணத்திற்கான யுனிசெப் இணைப்பதிகாரி அலாவுதீன் நிபாலும் கலந்து கொண்டார்.