மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக புலம்பெயர் தமிழ் உறவுகளின் நிதி உதவி மூலம் கல்குடா கல்வி வலயத்தில் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் செங்கலடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், செங்கலடி மக்கள் வங்கி முகாமையாளர் சி.சிவஞானராஜா, செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் கே.அருணாசலம், பேரவை பிரதிநிதிகளான த.லோகானந்த், வ.இனோஜன், ந.குகதர்சன், இ.தேவகுமார் மற்றும் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்குடா கல்வி வலயத்தில் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற 104 மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகம், இவர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் மற்றும் கல்வி உபகணரங்களோடு மக்கள் வங்கியினால் தொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவிகளை கனடா நாட்டில் வசிப்பவரான இராசரெத்தினம் கௌரீஸ் எழுபத்தையாயிரம் ரூபாவும், சுவிஸ்லாந்து நாட்டில் வசிப்பவரும், களுவாஞ்சிக்குடி சக்தி இல்ல பணிப்பாளருமான யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை உதயதாஸ் இருபத்தையாயிரம் ரூபாவும், சுவிஸ்லாந்து நாட்டில் வசிப்பவரும், வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்பிரமணியம் லலிதகுமார் முப்பத்தையாயிரம் ரூபாவும், சுவிஸ்லாந்து நாட்டில் வசிப்பவரும், வாழைச்சேனை கறுவாக்கேணியைச் சேர்ந்த தம்பிஐயா அழகேசன் இருபத்தையாயிரம் ரூபாவுமாக ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இவ்நிதியைக் கொண்டு 104 மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வைப்பிலிட்ட வங்கிப் புத்தகமும், மற்றும் நினைவுச் சின்னங்கள், கல்வி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரியில் 18 மாணவர்களும், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்களும், வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் 19 மாணவர்களும், கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தில் 02 மாணவர்களும், குமாரவேலியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் 02 மாணவர்களும், செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் 03 மாணவர்களும், சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மீராவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சித்தாண்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம், கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமகரிஷி வித்தியாலயத்தில் தலா ஒரு மாணவர் வீதமும், பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் 03 மாணவர்களும், சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் 05 மாணவர்களும், கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தில் 05 மாணவர்களும், முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் 05 மாணவர்களும், வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் 25 மாணவர்களும், கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 02 மாணவர்களுமாக மொத்தம் 104 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சுவிஸ்லாந்து நாட்டில் வாழும் வாகரைப் பிரதேசத்தை சேர்ந்த புஸ்பராசா அசோக்லூயிஸ் என்பவரே ஒழுங்கமைத்து வழங்கி வைத்துள்ளார்.
இவ்உதவியைப் புரிந்த கனடா மற்றும் சுவிஸ்லாந்தில் வாழும் புலம்பெயர் உறவுகளான இராசரெத்தினம் கௌரீஸ், தம்பிப்பிள்ளை உதயதாஸ், சுப்பிரமணியம் லலிதகுமார், தம்பிஐயா அழகேசன், புஸ்பராசா அசோக்லூயிஸ் ஆகியோருக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், பாடசாலை சமூகமும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று உதவியை கடந்த வருடமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக கல்குடா வலயத்தில் சித்தியடைந்த 97 மாணவர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












