(உ.உதயகாந்த்)
கிழக்கிலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டுமாநகரின் அழகிய எழில் கொஞ்சும் கடற்கரையினை முற்றமாக கொண்ட ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம், சிவானந்த ஆச்சிரமம் , சித்தானந்த தபோவனம் ஆகியவற்றின் ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி மகராஜ்யின் ஒன்பதாம் வருட மகா சமாதி தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் விழா நிகழ்வானது இன்றைய தினம் 24.11.2013 திகதி ஞாயிற்றுக்கிழமை ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வளாகத்தில் சுவாமி வேதாந்தா ஆனந்தா ஜீயின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
"இன்றைய தினத்தை சவாலானதாக எடுத்துக்கொள்ளும் போது நேற்றைய தினம் கனவாகவும் நாளைய தினம் நனவாகவும் அமைகின்றது" என கபீர் தாஸ் கூறியதனை நினைவு படுத்தியதுடன் , ஆன்மீக அறநெறி இல்லாத சமூகம் இனிமேலும் உருவாகாது என்பதனை இவ்வாறான நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றது என நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தமது உரையில் குறிப்பிட்டதுடன் , வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் சைவப்புலவர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், அறநெறிப் பாடசாலை அதிபர்களும் , சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டதுடன், வெற்றி பெற்ற மாணவர்களின் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் , கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.












