கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கருத்து 30 வருடங்களுக்கு முன்னதாகவே உருவானதொன்று.

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கருத்து முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே உருவானதொன்று.
 - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தா.கலையரசன் தெரிவிப்பு

 (தில்லை)  குறைந்த சனத்தொகையைக்கொண்ட பிரதேசங்களுக்கு தனியான பிரதேச சபை அமைய வேண்டுமாக இருந்தால் ஏன் அதிகளவான தமிழ் மக்கள் கொண்ட கல்முனைக்கு தனியான பிரதேச சபை அமையக்கூடாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தா.கலையரசன் கேள்வி எழுப்பினார்.


நேற்று தமது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் நாவிதன்வெளி பிரதேச சபையின் நிலைபற்றி கலந்துரையாடும் போதே இதனைத்தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக கருத்துக்கூறும் போது
கல்முனை தமிழ்ப்பிரதேசம் தனியாக இயங்கவேண்டும் என்ற கருத்து இன்று நேற்றல்ல பல தசாப்தங்களுக்கு முன்னரே உருவானதொன்றாகும். என்பதனை இக்காலத்தில் உள்ள சில முஸ்லீம் அரசியல் வாதிகள் அறிந்திராமல் இருப்பது மனவேதனை தரும் விடயமாகும்.

1993 இல் அமச்சரவை தீர்மானத்தில் 28 உப அலுவலகங்களும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்த அமச்சரபையில் சபை அனுமதி கொடுக்கப்பட்டது.
இதன்பின்னர் சகல உப அலுவலகங்களும் தரமுயர்த்தப்பட ஒரேஒரு தமிழ்ப்பிரதேச செயலகமான கல்முனை பிரதேச செயலகம் மாத்திரம் தரம் உயர்த்தப்படவில்லை இதற்கான முழுப்பொறுப்பிற்கும் அன்றிருந்த முஸ்லிம் அரசியல் வாதிகளின் போக்கே காரணமாக அமைந்திருந்தது.
14373 மக்கள் தொகை கொண்ட இறக்காமம் பிரதேச செயலகம், 25412 மக்கள் தொகை கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன தனியான பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்படும் போது 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கல்முனை பிரதேச செயலகத்தினை தனியான தமிழ்ப்பிரதேச செயலகமாக தரமுயரக்கூடாது என்பதில் முஸ்லீம் அரசியல் வாதிகள் கங்கணம் கட்டிநிற்பதன் மறுமம்தான் என்ன.

நீண்ட கால போராட்ட வரலாற்றில் சின்னாப்பின்னமாக உள்ள தமிழ் சமூகம் என்பதற்காக வேண்டி இன்னுமொரு சிறுபான்மைச்சமூகம் அரசாங்கத்திடம் அமச்சுப்பதவிகளையும், உயர்பதவிகளையும் பெற்றுக்கொண்டு இன்னும் தமிழ்மக்களை நிருவாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அடக்கநினைப்பது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதாக இருக்காது என்பதனை இவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இன்று கல்முனையில் வாழும் சிறுபான்மைச்சமூகத்திற்காகவேண்டி இலங்கையில் உள்ள பெரும்பான்மைச்சமூகத்தில் இருந்து குரல் கொடுக்கும் அளவிற்கு நிலமை மாறியுள்ளபோதிலும் சிறுபான்மைச்சமூகத்தில் இருந்து விட்டுக்கொடுப்பு இல்லாமையை நினைக்கும் போது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

கல்முனை தமிழ்ப்பிரதேசம் உருவாகுவதனால் இங்குள்ள இனங்களுக்கிடையே எந்தவிதமான இனமுறுகல்களும் ஏற்பட வாய்ப்பில்லை மாறாக இவர்களிடத்தே ஒற்றுமையும், நல்லெண்ணமும், சகோதரத்துவமும், பரஸ்பரமும் ஏற்பட்டு மக்கள் ஒற்றுமையின் சின்னமாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
கல்முனை மாநகர சபையின் கடந்த கால வரலாறுகளை பார்க்கும் போது தமிழர்களும் அங்கு தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதனை எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் தெரிந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அன்று மட்டக்களப்புடன் அம்பாறை மாவட்டம் இணைந்திருந்த போது தமிழர்களும் முஸ்லீங்களும் எந்தவிதத்திலும் முரன்பட்டதில்லை இரு இனங்களும் ஒன்றினைந்தே தேர்தல்களில் இறங்கி வெற்றியும் கண்டவர்கள் என்பதனை இக்கால முஸ்லிம் அரசியல் வாதிகள் அறிந்திருக்க வேண்டும்.
எனவே தமிழர்களும் கல்முனையின் பூர்வீகக்குடிகள் என்பதன் அடிப்படையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வருவதனால் எவருக்கும் எந்தப்பாதிப்பும் இல்லை இதற்கு தடையாக இருக்கும் அரசியல் வாதிகளே இந்த இரண்டு இனங்களுக்குமிடையே பிரச்சனைகளை தோற்றுவிக்கக்கூடியவர்களாக பார்க்கபப்டுவார்கள் எனவும் கூறினார்.