பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே பொன். செல்வராசா எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
2016ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் நிறைவடைந்த பின்னர் இவ்வாண்டு நீரைப் பெறும் பொதுமக்களின் தொகை 20 வீதத்தால் குறைவடையும். அதற்காக அரசாங்கம் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தை ஆரம்பிக்கவுள்ளது.
சுத்தமான நீரை வழங்குவதற்கே திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
அதனால் இலவசமாக நீரைப் பெறுவோர் பாதிக்கப்படுவதே பிரச்சினையாகும். அண்மையில் ஜனாதிபதி தலைமையில் வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர் நகரப் பகுதிகளுக்கே வழங்கப்படுகிறது. எனவே, கிராம மக்களும் நீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உன்னிச்சை குளத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகிக்கப்படுகின்றது.
இதனால் இங்கிருந்து நீர் விநியோகிக்கப்பட்டாலும் உன்னிச்சை குளப் பிரதேசத்தில் வாழும் மக்கள் நீரின்றி கஷ்டப்படுகின்றார்கள்.
இப்பிரதேசம் 24 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும்.
ஆனால், 7 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு மட்டும் நீரை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 பிரிவுகளுக்கு வழங்கப்பட்டபின் தொடர்ந்து மீதி 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் வழங்கப்பட வேன்டியது மிக அவசியம். வடக்கு, கிழக்கில் சில பிரதேசங்களில் சுத்தமான குடிநீரைக் கண்டிராத மக்கள் வாழ்கின்றனர்.
எனவே, இம்மக்கள் குடத்தை சுமந்து கொண்டு குடிநீரைப் பெற்றுக்கொள்ள 5, 10 கிலோ மீற்றர் செல்ல வேண்டியுள்ளது. 300 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இக்கிராம மக்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
இதேபோன்று மட்டக்களப்பு துறைநீலாவணையிலும் மக்கள் குடிநீரின்றி கஷ்டப்படுகின்றனர். இப்பிரதேச மக்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுமே நீர் வழங்கப்படுகிறது.
இப்பிரதேசத்திற்கு நீர் வழங்கும் குழாய் சிறியதாகும். எனவே, அங்கு 700 மில்லி மீற்றர் குழாய் பொருத்தப்படுமானால் அம்மக்களுக்கு 24 மணி நேரம் நீர் கிடைக்கும் நிலை உருவாகும் என்றும் பொன். செல்வராசா எம்.பி. தெரிவித்தார்.













