இனவாத மூட்டைகளை கட்டிக் கொண்டு காலத்திற்கு காலம் மாறுபட்ட கருத்துகளை மக்கள் மத்தியில் பேசி அரசியல் நாடகம் நடாத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரிஸ் கல்முனை வாழ் தமிழ் மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமானால் கல்முனையில் இன ஐக்கியம் சீரழிந்து விடும் என்று கூறுவது வேடிக்கையாகவுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் மு. இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கல்முனைப்பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அவரது மக்கள் தொடர்பாடல் பணிமனையில் 13.12.2013 வைத்து வழங்கிய நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில்
கல்முனைப் பிரதேச முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை கல்முனை பிரதேச தமிழ் மக்கள் அனுபவிப்பதற்கு யாராவது தடைக்கல்லாக இருக்கும் பட்சத்தில் கல்முனையின் இன ஐக்கியம் பாதிக்கப்படும் அல்லது அற்றுப்போய்விடும்.
கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து சாய்ந்தமருது பிரதேசசெயலகம் பிரிக்கப்பட்டு முழுநிறைவான அதிகாரங்களை கொண்ட பிரதேச செயலகமாக இயங்குவதால் கல்முனைக் குடிக்கும் சாய்ந்தமருதுக்கு இடையில் ஊர்ச் சண்டை ஏற்பட்டதா? இதற்கு ஹாரிஸ் எம்.பி பதில் கூறுவாரா?
கடந்த கால் நூற்றாண்டு காலமாக 29 கிராம சேவையாளர் பிரிவை தன்னகத்தே கொண்டு குறைமாத குழந்தையாக இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டால் தமிழ் மக்கள் நன்மை அடைவர். அண்டை வீட்டில் அடுப்பு புகைந்தால் மண்டையை உடைப்பது மடத்தனம் அல்லவா?
பல்வேறு பட்ட இழப்புக்களை சந்தித்து குற்றுயிராக வாழும் சமூகமாக தமிழ் இனம் உள்ளது இவ் இனத்தை தமது ஆளுகைக்குள் வைத்து இடக்கி ஆழ முற்படுவதை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அனுமத்திக்க மாட்டேன்.
ஒரு பிரதேச செயலகம் தரமுயரும் போது பல நன்மைகள் கிட்டும் இதனை தடுத்து நிறுத்துவதால் ஹரீஸ் எம். பி என்ன நன்மை கிட்டும் என்கிறார்?
பிரிந்த வடக்கு கிழக்கை இணைப்பது சாத்தியமற்றது என்று கூறும் இவர் கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பிரிக்கப்பட கூடாது என்று முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை முட்டாள் தனமாக கூறி மக்களை ஏமாற்றுவது ஏன்?
பல்வேறு பட்ட போராட்டங்களை நடாத்தி வாதாடிப்பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் கல்முனை வாழ் தமிழ் மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.
நாம் அரசியலுக்கு அடி எடுத்து வைக்க முன்னர் எமது பிரதேசத்திலுள்ள தலைவர்கள்இ புத்தி ஜுவிகள் போன்றோருடன் இணைந்து இவ்விடயத்துக்காக போராடியவன் எமது பொறுமையை எவரும் சோதிக்க வேண்டாம். நாம் சாதிக்க நினைக்கும் இவ்விடயத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளவர்களை எமது கல்முனை வாழ் தமிழ் மக்கள் விரோதியாக பார்க்கும் நிலை ஏற்படும்
எனவே கோரிக்கை வெற்றி பெற வழிவிடுங்கள் தடைக்கற்களை போட்டு எவரும் இன முரண்பாடுகளை தோற்று விக்க வேண்டாம் என்றார்.













