(உ.உதயகாந்த்)
“நமது இலக்குகளை அடைந்துகொள்ளும்போருட்டு மேற்கொள்கின்ற
கடின முயற்சிகள் சிலவேளைகளில் தவறானதாக அமைந்து தோல்விகளில் முடியலாம். அதற்காக
நாம் துவண்டுபோய் மீளவும் முயற்சிக்காமல் இருந்துவிடக்கூடாது” இவ்வாறு இன்று
27-12-2013, வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கிறேற் கல்லூரியின் வருடாந்த
பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்லூரியின் நிர்வாகப் பணிப்பாளரும் நிந்தவூர் உதவிப்
பிரதேச செயலாளருமான ஆர்.திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு விசேட
அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், கிழக்கு மாகாண உதவிக் காணி
ஆணையாளர் ரி.கஜேந்திரன், அம்பாறை மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்
எஸ்.கனகரெத்தினம், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் ஆகியோரும் சிறப்பு
அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.குணாளன், ஓய்வுபெற்ற
உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.பாலதாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளின்போது குறித்த கல்லூரியில் கல்விகற்று தரம் –
5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.(சா/தர) பரீட்சை மற்றும் க.பொ.த.(உ/தர)
பரீட்சைகளில் சித்திபெற்று சாதனை படைத்த மாணவ மாணவியர் அதிதிகளால் பாராட்டப்பட்டு
நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடகாலம் பூர்த்தியாவதை
முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கணிதத்துறையில் தனது ஆசிரியப்பணி மூலம் பல
மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினைப்பெற உதவிய முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர்
கே.பாலதாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கபட்டார். அத்துடன்
இலங்கையின் உயரிய சேவையான நிர்வாக சேவைக்கு ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து
தெரிவாகி தற்போது கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளராகக் கடமையாற்றும்
ரி.கஜேந்திரன், நிந்தவூர் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும்
அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் ஆகியோர் அம்பாறை மாவட்ட மேலதிக
அரச அதிபர் கே.விமலநாதனால் கௌரவிக்கப்பட்டார்கள். அதேபோன்று மேலதிக அரச அதிபரும்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்களினால் பல கலைநிகழ்வுகள்
அரங்கேற்றப்பட்டதுடன் மாணவர்களின் பெற்றோரும் கல்விசார் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.












