மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக உள்ளீர்க்கப்பட்டவர்களில் வெளி மாவட்டங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு மாவட்டத்துக்குள்ளேயே நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்டுவருகின்றார்.மட்டக்களப்பினை சேர்ந்த பட்டதாரிகள் பலருக்கு வெளி மாவட்டங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிறு குழந்தைகள் உள்ள பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள், குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்கள் உட்பட பல தரப்பினர் இது தொடர்பில் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பிரதியமைச்சர் கலந்துரையாடியுள்ளதாகவும் வெளிமாவட்டங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு கிழக்கு மாகாணசபை ஊடாக நியமனங்களை வழங்க முதலமைச்சர் பிரதியமைச்சரிடம் உறுதியளித்துள்ளதாகவும்
குறிப்பாக மாவட்டத்துக்குள் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கையெடுப்பதாக முதலமைச்சர் பிரதியமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும்
எனவே வெளி மாவட்டங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுபெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்












