படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

மீன்பிடித் தொழிலுக்காக நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 04 மணியளவில் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பத்தாம் குறிச்சியை  சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான ஜெஸ்டின் (வயது 37) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் வழமை போன்று தனது மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றபோது, கடல் அலை அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்த மீனவரின் படகு கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.