முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டு கல்முனை தமிழர்களை புறக்கணித்தமையே, தமிழ் பிரதேச செயலகம் கோருவதக்கான காரணம்.

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நீண்ட கால கனவு நனவாகவுள்ள இறுதி சந்தர்பத்தில் இனவாத கருத்துகளை பேசியும், ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை பா.உ  ஹரிஸ் வெளியிடுவதனால் கல்முனையின் இன நல்லுறவு சிரழிந்து விடும் பேரபாயம் உள்ளது.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு, நடைமுறைப் படுத்தப்படுவதட்க்கு தடையாகவுள்ள ஹரிஸ் எம்.பியும் அவரது கட்சி காரர்களும், இன்னும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் விடுக்கின்ற ஊடக அறிக்கைகள் தமிழ் மக்களின் மனங்களை காயப்படுத்தி உள்ளது. இதனை வெந்த புண்ணில் வேல் பாச்சிய செயலாகவே கொள்ள முடியும்.

கல்முனை செயலகப் பிரிவில் இருந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகம் (கல்முனை வடக்கு பிரதேச செயலகம்) 1990ம் ஆண்டு காலபகுதியில் ஆயுத குழுக்களினால் பிரிக்கப்பட்டதாக ஹரிஸ் எம்.பி கூறியுள்ள கூற்று விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிராக போராடிய ஆயுத குழுவின் கருத்துக்கு அரசாங்கம் செவி சாய்க்குமா? அல்லது மாறி மாறி வந்த அரசாங்கங்களில் முண்டு பிடித்துக்கொண்டு அமைச்சு பதவி வகித்தவர்களின் கதைக்கு அரசாங்கம் செவி சாய்க்குமா? அன்று ஆயுத குழுக்களின் கருத்துக்கு அரசாங்கம் இணங்கி இருந்தால் ஏன் நாம் இவ்வளவு காலம் வரை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு போராட வேண்டும்.

கல்முனை வாழ் தமிழ் மக்களை முஸ்லிம் அரசியல் வாதிகள் திட்டமிட்டு புறக்கணித்தமை, தமிழ் மக்களை தமது ஆளுகைக்குள் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தமையால் தமிழ் மக்களின் மிதவாத தலைவர்கள் தமிழ் பிரதேச செயலகம் கோரி போராடினார்கள்.

அந்த வகையில் அன்று கல்முனை தமிழ் பிரச செயலக கோரிக்கையை முன்வைத்து போராடிய அந்தோனிப்பிள்ளை ஆசிரியர், முன்னாள் மாவட்ட அபிவிருத்தி குழு உறுப்பினர் அண்ணன் வேல்முருகு, தமிழரசுகட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களான கு.ஏகாம்பரம், தொண்டர் சாமித்தம்பி, கவிஞர் பாண்டியூரான் போன்றவர்கள் தந்தை செல்வாவின் பாசறையில் வளந்தவர்கள். இவர்களை ஆயுத தாரிகள் என்று பொருள் பட கூறுவது ஹரிஸ் எம்.பி யின் அறியாமையாகும்.

ஹரிஸ் எம்.பி பல சந்தர்பங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டால் முஸ்லிம்களின் நிலங்கள் பறி போய்விடும் என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். இன்று முஸ்லிம்கள் உரிமை கொண்டாடும் இடங்கள் தமிழர்களிடமிருந்து கபளீகரம் செய்யப்பட்ட நிலங்களாகும். இதனை கூறுவதற்க்கு காரணம் ஹரிஸ் தனது அறிக்கையில் ஞாபகமூடியமையாகும்.

தமிழ் பிரதிநிதிகள் சிங்கள அமைப்புகளுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறுவது மேலும் இனவாத தீ யை மூட்டி ஹரிஸ் எம்.பி அரசியல் குளிர்காய முட்படுவதைக்கட்டுகின்றது.

பௌத்த குருமார்கள் கூட கல்முனையில் தமிழர்களின் நியாயமான உரிமையை வழங்க வேண்டும் என்று கூறுமளவுக்கு வந்துள்ளார்கள் என்றால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழர்களை அடக்கியாள முற்படுவதன் வெளிப்படை தன்மையாக காண முடிகின்றது.

ஆகவே ஹரிஸ் எம்.பி யின் சிறு பிள்ளை தனமான அறிக்கைகளை விட்டு இன மோதலை உண்டு பண்ண எத்தனிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.