கடந்த 2009 ஆம் ஆண்டில் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு நியமனம்
பெற்ற நாளிலிருந்து பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் அப்பிரதேசத்திற்கும் பிரதேச
பொதுமக்களுக்கும் ஆற்றிவரும் சேவைகளால் கவரப்பட்ட பிரதேச செயலக ஊழியர்
ஒருவர் அவரைப் பாராட்டி வாழ்த்துப்பாமாலை வழங்கிக் கௌரவித்த நிகழ்வொன்று கடந்த
27-12-2013, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் முன்பிள்ளைப்பராய
அபிவிருத்தி உத்தியோகத்தராக அண்மையில் நியமனம் பெற்ற யோகராசா உஜெயந்தன் என்ற
ஊழியரே இவ்வாறு பிரதேச செயலாளரைக் கௌரவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “நான் பல்கலைக்கழக மாணவனாயிருந்த காலத்திலிருந்தே பிரதேச செயலாளரது சேவைகளை அவதானித்து வருகின்றேன். இப்பிரதேச
மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், அனர்த்த
நிலைமைகளின்போது பாதிப்புற்ற மக்கள்மீது அவர் காட்டிய கரிசனை, இன மத
வேறுபாடுகளற்ற அவரது அணுகுமுறை, எல்லோரையும் சமமாக மதிக்கும் பண்பு, ஆன்மீக
ஈடுபாடு என்பனவற்றால் கவரப்பட்டு அவரோடு இணைந்து பணியாற்றவேண்டும் என அப்போதிருந்தே
மிகவும் ஆசைப்பட்டேன். கடவுளின் கிருபையால் இப்பிரதேச செயலகத்திலேயே எனக்குப்
பட்டதாரிப் பயிலுனராக நியமனம் கிடைத்தது. வெறும் வார்த்தைகளால் அல்லாது ஒரு
வாழ்த்துப்பாமாலையாக அவரது சேவைகளைப் பாராட்டி கௌரவிக்க எண்ணியே இவ்வாறு செய்தேன்”
எனக் கூறியதுடன் தனது கௌரவத்தினை மனமுவந்து ஏற்றுக்கொண்டமைக்காக பிரதேச
செயலாளருக்கு நன்றிகளையும் கூறினார்.
அக்கரைப்பற்று, கோளாவில் – 2 ஐச் சேர்ந்த இவர் கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் B.Ed பட்டதாரி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












