(உ.உதயகாந்த்)
தற்போது
ஆரம்பமாகியுள்ள பருவமழைக்காலத்தினைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தின்
தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கான முன்னாயத்த வழிமுறைகளை அமுல்படுத்துவது
தொடர்பாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒன்றுகூடலானது
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர்
வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் கடந்த 28.11.2013, வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு
பிரதேசத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் மழை காலங்களில் உண்டாகும் வெள்ள
அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்வதற்கான முன்னாயத்த வழிமுறைகளை ஆராய்ந்து அமுல்படுத்துவது
தொடர்பாக நடாத்தப்பட்ட இவ்வொன்றுகூடலுக்கு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத், அம்பாறை மாவட்ட 632 ஆவது
இராணுவப் படையணியின் கமாண்டர் கேணல் பி.எச்.என்.சிறிசாந்த, அக்கரைப்பற்று மாவட்ட
வைத்திய அதிகாரி திருமதி.எம்.ரி.ஜரேயா, ஆலையடிவேம்பு பிரதேச செயலக கணக்காளர்
எம்.ஐ.எம்.முஸ்தபா, தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலக தொழிநுட்ப
உத்தியோகத்தர் ஏ.எம்.பாரிஸ் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரி
எச்.யு.சமந்த உட்பட பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் சமுகமளித்திருந்தனர்.
வங்காள
விரிகுடாக் கடலில் ஏற்படக்கூடிய தாழமுக்க நிலைகளால் இலங்கையின் கரையோரப்
பிரதேசங்களில் நிகழக்கூடிய சூறாவளி அபாயங்கள் தொடர்பாகவும் அவற்றின் தொடர்ச்சியாக மக்களின்
அன்றாடவாழ்வில் உடனடியாக ஏற்படக்கூடியதும் அதுபோல நீண்டகாலத்திற்குத் தொடரக்கூடிய
தாக்கங்களும் தொடர்பாக காணொளி விளக்கப்படங்களூடாக விரிவாக விளக்கமளித்த அனர்த்த
முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அவர்கள், அத்தாக்கங்களை வருமுன்பே
தடுக்கக்கூடிய வழிமுறைகள் பற்றியும் அதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய
நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
இக்கலந்துரையாடலின்போது
கலந்துகொண்ட அதிகாரிகள் ஒவ்வொருவரும் கடந்த காலங்களில் இவ்வெள்ள அனர்த்தத்தினைத்
தடுக்கும் வகையில் தமது நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகத் தெளிவுபடுத்தியதுடன்
எதிர்வருகின்ற பருவமழைக்காலத்தினைக் கருத்திற்கொண்டு பொதுமக்களைக் காப்பதற்காகத் தங்களால்
திட்டமிடப்பட்டுள்ள முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.
அதனைத்தொடர்ந்து
இவ்வாறான அனர்த்த நிலமைகளின்போது ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் உதவிக்காகப் பெற்றுக்கொள்ளக்கூடிய
பொருட்கள், இயந்திரங்கள் தொடர்பாக நிரற்படுத்தப்பட்டதுடன் அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தினால் தெரிவுசெய்யப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள அபாய
ஒலியெழுப்பும் கோபுரங்களின் தொழிற்படுதிறன் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் அபாய நிலைகளில் ஒலியெழுப்பக்கூடிய கைகளால் இயக்குகின்ற அவசர ஒலிப்பான்
தொடர்பாகவும் செயன்முறை விளக்கமளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.












