தொழுநோயில் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் 4 வது இடத்தில் உள்ளது.





(மா.சசி)
 இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் தொழுநோயில் 4வது இடத்தில் உள்ள அதே வேளை மாகாண அடிப்படையில் கிழக்க மாகாணம் இரண்டாமிடத்திலும் மேல் மாகாணம் முதலாமிடத்திலும் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் 695 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக  மட்டக்களப்பு மாவட்ட தொழுநோய் தடுப்புச் சிகிச்சைப் பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர் பி.மனோகரன் தெரிவித்ததுடன் இந்த நோயால் கடந்த ஐந்து வருடங்களில் 38 பேர் அங்கவீனமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச தொழுநோயாளர் தினம் ஜனவரி மாதம் 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இத் தினத்தினை முன்னிட்டு தொழுநோய் தடுப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26)  நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டில் 119 பேருக்கும் 2010ஆம் ஆண்டில் 126 பேருக்கும் 2011ஆம் ஆண்டில் 151 பேருக்கும் 2012ஆம் ஆண்டில் 152 பேருக்கும் 2013ஆம் ஆண்டில் 147 பேருக்கும் தொழுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவில் 33 தொழுநோயாளர்களும் ஆரையம்பதி பிரதேச சுகாதார சேவைகள் பிரிவில் 18 பேரும் ஏறாவூர் சுகாதார அலுவலகப் பிரிவில் 27 பேரும் செங்கலடி பிரதேசத்தில் 22 பேரும் காத்தான்குடி பிரதேசத்தில் 8 பேரும் பட்டிப்பளை பிரதேசத்தில் 7 பேரும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 10 பேரும் வழைச்சேனை பிரதேசத்தில் 12 பேரும் ஓட்டமாவடி பிரதேசத்தில் 4 பேரும் வவுணதீவு பிரதேசத்தில் 3 பேரும் கிரான் பிரசேத்தில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

கிழக்கு மாகாணம் இந் நோயில் இரண்டாமிடத்தில் உள்ள போதும் சனத்தொகை அடிப்படையில் பார்த்தால் முதலாமிடத்திலேயே உள்ளது எனத் தெரிவித்த அவர் இந்த நோய் சன நெருக்கடியுள்ள பிரதேசங்களில் அதிகளவு பரவியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் செல்வாநகரிலும் செங்கலடிப் பிரதேசத்தில் களுவங்கேணி,கொம்மாதுறை கிராமங்களில் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன் மட்டக்களப்பில் சனத்தொகை நெரிசல் குறைந்த படுவாங்கரைப் பகுதியில் இந் நோய் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.



இதில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொழுநோய் பற்றிய விழிப்புணர்வ நடவடிக்கை மிகவும் முன்மூரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதனால் தொழுநோயாளர்களை கண்டுபிடிக்கக்கூடிய நிலை காணப்பட்டது.இதனால் வேகமாகப் பரவுவதாக அவதானிக்கமுடிகிறது.வேகமாகப் பரவுகிறது என்பதைவிட மக்கள் விழிப்படைவதனால் தேமல் வந்தாலே வைத்தியப் பரிசோதனைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் இந் நோயைக் கண்டுபிடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

மக்கள் விழ்ப்படைவதனால் ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடிக்கக் கூடிய நிலை ஏற்படுவதனால் சிகிச்சை அழிப்பதனால் மூன்று நாளிலேயே  தோற்றா நிலை ஏற்படுகின்றது.இந் நிலையில் செல்லும் போது மட்டக்களப்பில் மலேரியா நோய் இல்லாமல் போனது போன்று தொழுநோயும் இல்லாது ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது எனத் தெரிவித்த அவர் இந் நிலையில் இதனை முழுமையாகத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் இதற்காக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், தொழுநோய் தடுப்பு இயக்கம் என்பன இந்த நோய் தொடர்பான விழிப்பூட்டலை 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நோய்க்குரிய அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாகக் குணப்படுத்தமுடியும் எனவும் கூறினார்.குடும்பத்தில் ஒருவருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பரிசோதனையினை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்த அவர் தேமல் போன்ற அடையாளம் காணப்பட்டாலே பரிசோதனை சேய்வது நல்லது எனவும் தெரிவித்தார்.




இதேவேளை மட்டக்களப்பு  மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், டாக்டர் ஏ.எல்.றஹ்மான் தெரிவிக்கையில்,
'இந்த நோய் தொற்றாத வகை, தொற்றும் வகை என இரண்டு வகையிலுள்ளன. இந்த நோய் மைக்றோ பற்றிரீயா எனப்படும் கிருமி மூலம் சுவாசத்தின் ஊடாக பரவுகின்றது. தேமல் போன்ற அடையாளம் காணப்படுவதுடன், நரம்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்தக் கிருமி தொற்றி உடனடியாக இந்த நோய்க்கான அறிகுறி தென்படாது. 06 மாதங்களிலிருந்து   20 வருடங்கள் வரை தாக்கம் தென்படும் காலம் நீடிக்கும் எனவும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய தொற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி எஸ்.கௌரிபாலன், மட்டக்களப்பு மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பி.தேவராஜ் உட்பட சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.