வறுமையால் பாடசாலைக்குச் செல்லாமல் இருந்த சிறுவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!


(தீரன்)
மட்டக்களப்பு கித்துள் குளிர்ந்த சோலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பாடசாலைக்கு செல்லாமல் இருந்த குடும்பங்களின் சிறுவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி வழங்கியுள்ளது.

 அண்மையில் மட்டக்களப்பின் வறுமை இதுதான் என்ற தலைப்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை தொடர்ந்து, மேற்படி பிரதேசத்திற்கு செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் சென்ற சேவகம் நிறுவனத்தினர் குறித்த குடும்பங்களுக்கு தேவையான உடனடி தேவைகளை இனம் கண்டு அதற்கான உதவிகளை வழங்கியதுடன் அக்குடும்பத்தில் இன்றுவரை பாடசாலை செல்லாமல் இருந்த சிறுவர்களுக்கு பாடசாலை செல்வதற்கு தேவையான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களில் உள்ள குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோருக்கு பொங்கலுக்கான புத்தாடைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன், அவர்கள் பாடசாலை செல்வதற்கு தேவையான புத்தகப் பை, அப்பியாசக் கொப்பிகள், மற்றும் பல பாடசாலை உபகரணங்களையும் வழங்கிவைத்துள்ளனர்.

இதே நேரம் மேற்படி குடும்பங்களுக்கான படுக்கை விரிப்புக்கள், பாய் போன்றவற்றை செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்ததுடன், மேற்படி குடும்பங்களுக்கு பொங்கலுக்குத் தேவையான கித்துள் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வழங்கி வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் சேவகம் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.நிலாந்தன், கித்துள் கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சிறிகாந், கித்துள் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று மேற்படி உதவிகளை வழங்கியுள்ளனர்.

மேற்படி குடும்பங்களின் நிலை குறித்து செங்கலடி பிரதேச செயலாளர்            உ. உதயசிறிதர்  அவர்களிடம் கேட்டபோது குறித்த குடும்பங்களுக்கு தேவையாக உள்ள தற்காலிக கொட்டில்கள் மற்றும் அவர்களுக்கு தேவையாக உள்ள ஏனைய உதவிகள் குறித்து ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.