நாளைய தினம் கல்லடி கடற்கரையில் மாபெரும் சிரமதானம்.

(உ.ஜெஷோமிக்கா)

மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள பெருக்கு, நுளம்பு பெருக்கம், நகரை அழகுபடுத்தல் போன்ற திட்டங்களிற்கமைவாக கல்லடி அன்னைவேளாங்கன்னி கடற்கரைப் பகுதியில் உள்ள கடற்கரை மற்றும் வெற்று காணிகள் என்பவற்றை சிரமதானம் மூலமாக சுத்தம் செய்யும் நடவடிக்கை நாளை (31) வெள்ளிக்கிழமை  காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது மாநகர ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைவாக கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

சிரமதான நிகழ்வில்  காத்தான்குடி சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச்சங்க , மாதர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் , சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் சமுர்த்தி சங்கங்கள் ஆகியனவும் கலந்துகொள்ளவுள்ளதுடன், கிராம மக்களையும் இந் நிகழ்வில் கலந்து பங்களிப்புக்களை வழங்கியுதவுமாறு பொது சுகாதார பரிசோதகர் அழைப்புவிடுகின்றார்.

மேலும் கல்லடி கடற்கரையினை அண்டிய பகுதியில் சுனாமிக்கு முன்னர் வசித்தவர்களுக்கு பணிச்சையடியில் காணிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்களது கல்லடி காணிகளை துப்பரவு செய்யாமல் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏற்ற வகையான பற்றைக் காடுகளாக வளர்ந்த நிலையில் காணப்படுவதனால் நாளைய தினம் இவ்வாறான காணிகளின் உரிமையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்வது கட்டாயமாகும் என்பதனையும் அறியத்தருகின்றார்.