புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் கும்பாபிஷேக பாற்குட பவணி நிகழ்வு

(த.லோகதக்சன்)
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் கும்பாபிஷேகத்தின் நிறைவை முன்னிட்டு பாற்குட பவணி அண்மையில் ஆலய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்ட பட்ஷ மஹா கும்பாபிஷேக பெருவிழாவினை தொடர்ந்து 48 நாட்;கள் மண்டலாபிஷேக பூசை நிகழ்வுகள் நடைபெற்று அதன் இறுதி நாள் நிகழ்வாக சங்காபிஷேக நிகழ்வும், பாற்குட பவனியும் இடம்பெற்றது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயாப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குட பவனியானது கல்குடா வீதி வழியாக ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தினை சென்றடைந்து அங்கிருந்து விபுலானந்த வீதி வழியாக பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் பத்திரகாளி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்தது.

இப்பாற்குட பவனியின் போது புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் இரு பக்கமும் நந்திக் கொடி ஏந்தியவாறும், மயிலாட்டம், குரங்காட்டம், காவடியாட்டம், புலியாட்டம், குதிரையாட்டம், சிங்காட்டம் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்று முன்நோக்கிச் செல்ல பின்னால் ஐநூறுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தலையில் பாற்குடமேந்தி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து 1008 சங்காபிஷேக பூசை நிகழ்வுகளும் இடம்பெற்று கலந்து கொண்ட அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.