தனித் தமிழ் பட்டிருப்பு தொகுதியில் இருந்து தமிழ் மந்திரிகள் உருவாக்கப்பட வேண்டும் - பிரதி அமைச்சர் முரளிதரன்

 ( ரவிப்ரியா )
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திங்களன்று  (27.01.2014) பட்டிருப்புத் தொகுதியில் உள்ள களுதாவளை, கோட்டைக்கல்லாறு பெரியகல்லாறு, துறைநீலாவணை கிராமங்களுக்குச் சென்று
அங்குள்ள ஊர் பிரமுகர்களையும் பொதுமக்களையும் சந்தித்து அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கான திட்டங்கள் பற்றி சினேகபூர்வமாக கலந்துரையாடி தேவையான விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.


பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் வளாக மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் கருத்துரை வழங்குகையில்.

யுத்தப்பாதிப்பு:     

அடக்கு முறைக்கு எதிராக நாம் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் ஐந்து பத்து வருடங்களில் இலக்கை அடைந்துவிடும் என்றே நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 30 வருடங்களாகியும் எம்மால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து பேரழிவுகளையே சந்தித்து வந்தனர். வாழ்க்கைக்கான போராட்டம், போராட்டமே வாழ்க்கை என்ற நிலையைத் தோற்றுவித்தது. இதிலிருந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டோம். தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்தோம். மக்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
அரசுடன் இணைந்திருப்பது துரோகமல்ல:

நாம் தேசிய ரீதியில் இணைந்திருப்பது துரோகம் என யாரும் நினைக்கக் கூடாது. இலங்கை அரசியல் நிலையைப் பொறுத்தவரை ஒரு தமிழரோ அல்லது ஒரு முஸ்லிம்மோ ஜனாதிபதியாக வருவது சாத்தியமில்லாத விடயம். எனவே யாருக்கு அதிகம் வாய்ப்பிருக்கின்றதோ அவருக்கு எமது வாக்குப் பலத்தைக் காட்டி அவருக்கு ஆதரவளிப்பதன் மூலமே எமது உரிமைகளையும் அபிவிருத்தியையும் வாதாடி பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு பேசுவது அழகாகத்தான் இருக்கும். ஆனால் ஆவது ஒன்றுமில்லை. எதிர்க்; கட்சியில் உள்ளவர்கள் தங்கள் கதிரையைப் பிடிக்கும் வரை மட்டுமே எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள்;. கதிரை கிடைத்ததும் அரசு மாற்றம் வந்து அரசாட்சி செய்யும் போது எம்மைக் கைவிட்டுவிடுவார்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது.

இன்றையத் தேவை தமிழர்களின் அரசியல் பலமே:

எனவே நாம் எமக்கான அரசியல் பலத்தை உருவாக்குவது இன்றைய தேவையாக இருக்கின்றது. அதன் மூலமே எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேறக் கூடியதாக இருக்கும். எனவே பொதுமக்கள் அதை அடைவதற்காக மாற்று வழிகளில் செல்வது தவறாகாது. மாற்று வழிகள் இன்றி அவற்றை அடையவும் முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பட்டிருப்புத் தொகுதியானது தனித் தமிழ் தொகுதியாகும். இங்கிருந்து இரண்டு மூன்ற மந்திரிகள் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் அதிகளவு அபிவிருத்தியை அறுவடை செய்து கொள்வதற்கும் பட்டிருப்பு சிறந்ததொரு களமாகும்.

மட்டக்களப்பு தெற்கு எல்லைப் பிரச்சனைக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கின்றது. இப் பிரதேசத்திற்கான தனியான பிரதேச செயலக கோரிக்கை நியாயமானது. இதுவும் வட்டாரப் பிரிப்பு நிறைவடைந்ததும் சாத்தியமாகும்.

அரசுடன் இணைந்து இயங்குவதால் பாரிய அபிவிருத்திகள்:

நாம் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாரிய நீர் விகியோகத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எந்த முஸ்லிம் சிங்கள சமூகங்களும் எதிர்க்கவில்லை. ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கு வடக்கில் ஒரே இனத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடிப்படை மனித உரிமையை மறுக்கின்றவர்களால் எவ்வாறு ஜெனிவாவில் சென்று மனித உரிமை பற்றிப் பேச முடியும்?

நாம் உன்னிச்சைக் குளத்தை 11ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் 5அடி உயர்த்தி மூன்று இலட்சம் மக்களுக்கு  நீர் விநியோகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம். மேலதிகமாக 4000 ஏக்கர் வயல்களுக்க நீர்ப்பாசன வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

இவ்வருட நடுப்பகுதியில் பெரியகல்லாறு கோட்டைக்கல்லாறு துறைநீலாவணை மண்டூர் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களுக்கு 1000 மில்லியன் ரூபா செலவில் முழுமையான நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவைகள் பாரிய அபிவிருத்தித் திட்டங்களாகும். இது போன்ற பல்வேறு பாரிய அபிவிருத்தித் தி;ட்டங்கள் எம்மால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவற்றை நாம் எமது குறைந்த அரசியல் பலத்தைக் கொண்டே நாம் செய்து வருகின்றோம். இப்பலமானது பல மடங்காக அதிகரிக்கும் போது எமது தேவைகள் அனைத்தையுமே துரிதமாக நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் சம்பந்தமாகவும் எமது அரசியல் பலத்தைக் காட்ட வேண்டியுள்ளது. எமது தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக இயங்க வேண்டியதின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எமது இருப்பைத் தக்க வைப்பதற்கு அதுவே சிறந்த வழியாகும்.

எனவே தனித் தமிழ் தொகுதியான பட்டிருப்புத் தொகுதி மக்கள் சிறந்ததொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றிச் சிந்திக் வேண்டிய நேரமிது. இங்கிருந்து மந்திரிகள் உருவாவதற்கான வாய்ப்புக்களை நாம் சரியாகப் பயன்னடுத்திக் கொள்ள வேண்டும்.