இனப்பிரச்சினைக்கு அபிவருத்தி தீர்வாக அமையாது -பொன்.செல்வராசா எம்.பி


(மா.சசி )
இலங்கையில் பிறையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அபிவிருத்தி தீர்வாக அமையாது.இனப்பிரச்சினைக்கு அபிவிருத்தி தீர்வாக அமையுமாக இருந்தால் 60 வருட சாத்வீகப் போராட்டமோ அதன் பின்னரான எமது இளைஞர்களின் ஆயதப் போராட்டமோ நடன்திருக்கவும் மாட்டாது தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்தும் இருக்க மாட்டார்கள் பல்லாயிரக் கணக்கான உயிர்களையம் உடமைகளையும் இளந்திருக்க மாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை பொது அமைப்புக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று வவுணதீவில் இடம்பெற்ற போது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் வாதிகள் வடக்குக் கிழக்கில் அபிவிருத்தி ஏற்படுகிறது இதைத் தவிர தமிழ் மக்களுக்க என்ன வேண்டும் எமக்கு வேறு ஒன்றும் தேவையில்லை எனத் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு இறைமையுள்ள நாட்டில் அந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியதும் அவர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியதும் அந்த அரசாங்கத்தின் கடமையாகும்.நாங்களும் இந்த நாட்டின் தேசிய இனம் எனக் கருத்தில் கொண்டு அபிவிருத்தி செய்துதான் ஆக வேண்டும்.நாங்கள் அபிவிருத்தி வேண்டாம் எனக் கூறவில்லை அபிவிருத்தி மூலம் இந்த நாட்டில் பிறையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதைத்தான் கூறுகின்றோம்.
அபிவிருத்திதான் இனப் பிரச்சினைக்கு தீர்வாக தமிழ் மக்கள் கருதி இருந்தால் முன்னாள் அமைச்சர்களான தேவநாயகம் ,நல்லையா,இராசதுரை பொன்றோர் செய்யாத அபிவிருத்தியா அன்று நடந்த அபிவிருத்தி எங்கே தற்போது இடம்பெறும் அபிவிருத்தி எங்கே அபிவிருத்தியை இனப் பிரச்சினைக்கு தீர்வாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அறுபது அறுபத்தைந்து வருட சாத்வீகப் போராட்டமும் இடம்பெற்றிருக்காது. அதன் பின்னர் எமது இளைஞர்களால் ஆயுதமேந்திய போராட்டமும் இடம்பெற்றிருக்காது,தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து இருக்கவும் மாட்டார்கள் பல்லாயிரக் கணக்கான உயிர்களையோ சொத்துக்ளையோ உடமைகளையோ இளந்திருக்க மாட்டார்கள்.
அபிவிருத்தி தங்களது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்பதனாலேயே தமது அபிலாசைகள் நிறைவேறும் வரை தமிழ் மக்கள் எங்களுடன் இணைந்து போராடுவார்கள்; ஆயுதம் ஏந்தியல்ல இராஜதந்திர ரீதியாகப் போராடுவார்கள். சாத்வீகப் போராட்டத்தினை அடுத்து ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு வந்த நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
அபிவிருத்தி எமது இனப் பிரச்சினைக்கு தீர்வு அல்ல என்பதனை இந்த அரசுக்கு தமிழ் மக்கள் பல தடவை தெளிவு படுத்தியுள்ளனர்.2009 ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை தவிர வேறு எதுவும் தேவை இல்லை என அரசாங்கத்தில் உள்ள தமிழ் அரசியல் வாதிகள் கூறுகின்றனர்.
அப்படியானால் 2009 ஆண்டின் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் என்ன கூறியுள்ளனர் 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர்.வடக்கில் ஒன்று இரண்டு பேர் தவிர ஏனையவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தே தெரிவு செய்யப்பட்டனர்.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒருவர் தவிர ஏனையவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தே தெரிவு செய்யப்பட்டனர்.அண்மையில் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் 30 உறுப்பினர்களைத் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவு செய்துள்ளனர்.
இதில் இருந்து தமிழ் மக்கள் என்ன கூறியிருக்கின்றார்கள் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைக்கு அபிவிருத்தி தீர்வாக அமையாது அது வேறு வழியில் உள்ளது என்பதை தெளிவு படுத்தியுள்ளனர். இந்த வேறு வழிதான் நாம் ஒரு தேசிய இனம் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கான அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும் என்பதனை தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நடவடிக்கை இறுதிக் கட்ட நடவடிக்கை போன்று உள்ளது.எம்மை திரும்பிப் பார்க்காத சர்வதேச சமூகம், போராட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது எனத் திரும்பிப் பார்க்காத சர்வதேச சமூகம் தற்போது எம்மைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.
சர்வதேச சமூகம் இன்று எமக்காக உள்ளது, நிச்சயம் விடிவு கிடைக்கும் பொறுத்திருங்கள.; நிங்கள் கேட்கலாம் எவ்வளவு காலம் பொறுப்பது என்று இனப்பிரச்சினை விடயத்தில் பொறுமைக்கு எல்லை இல்லை.பலஸ்தினியா எமக்கு முன் ஆரம்பித்த போராட்டம் இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை அந்த மக்களும் சுதந்திரத்தை அடையும்வரை போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
சர்வதேசம் இன்று எம் பக்கம் உள்ளமைக்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பத்தான் இதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.நாங்கள் எமது இலக்கை அடையும் வரை நாம் போராடுவோம்.இதிகாரப் பரவலாக்கல் வழங்கப்படும் வரை நாம் இராஜதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவோம் என்றார்.