ஐந்தாவது முறையாகவும் அரச தொலைக்காட்சி விருது பெற்ற தயாரிப்பாளர் எஸ்.மோசேஸ்

இலங்கையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து தெரிவு செய்யப்படும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வருடாவருடம் தேசிய மட்டத்திலான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2013ம் ஆண்டுக்கான விருது வழங்கல் நிகழ்வில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப்பிரிவுத் தயாரிப்பாளர் எஸ்.மோசேஸ் அவர்களுக்கு 2013ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்ற உயர் அரச தொலைக்காட்சி விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ சமல் ராஜபக்ஸ அவர்களின் முன்னிலையில் 2014.01.12 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விருது வழங்கலில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் எஸ்.மோசேஸ் அவர்களுக்கு இந்த விருது வழங்கிவைக்கப்பட்டது. 'சமாதான வாழ்வு' என்ற கல்வி கலாசார நிகழ்ச்சி தயாரிப்புக்காகவே இவ்விருது வழங்கப்பட்டது.   இது, இவர் பெறுகின்ற ஐந்தாவது அரச தொலைக்காட்சி விருது என்பது குறிப்பிடத்தக்கதொரு விசேட அம்சமாகும். 2012ம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நாடக நெறியாளருக்கான அரச விருதினையும், 2011ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கான அரச விருதினையும், 2009ம் ஆண்டுக்கான சிறந்த நாடக நெறியாளருக்கான அரச விருதினையும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி விவரண தயாரிப்பளருக்கான அரச விருதினையும் ஏற்கனவே பெற்றுள்ளார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடந்த பதினான்கு வருடங்களாக நிரந்தர தயாரிப்பாளராக கடமையாற்றிவரும் இவர் தொழிநுட்ப கலைகள் என்ற நூலுக்கு மாகாண சாகித்திய விருதினையும், 'அன்னை' என்ற சிறுவர் இலக்கியத்திற்கு இளைஞர் சாகித்திய விருதினையும், மேலும் சர்வதேச அமைப்புக்கள் பிரதேச செயலகங்களினால் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஊடகத்துறை ஆய்வாளர், எழுத்தாளர், கலைஞர் என பன்முக ஆளுமை கொண்ட இவர் தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறையில் முதுமாணி, ஊடகவியல் அதிவிசேட பட்டயம், வெகுஜன ஊடகத்தில் உயர் பட்டயம், மொழியியல் (தமிழ்த்துறை) சிறப்புப்பட்டம் என்பவற்றை பெற்றுள்ளார்.

இவரை எமது  Battinews.com  இணையத்தளம் வாழ்துகின்றது.

கிருஷி

*விருதினைப் பெற்றுக்கொண்ட எஸ்.மோசேஸ் தனது மகன் மற்றும் மனைவியுடன் காணப்படுகிறார்.(படம் இணைக்கப்படும்)