(ஞானச்செல்வன்) தைப்பூச திருநாள் சந்திரன் கடகத்தில் இருந்து தனது சொந்த வீட்டில் ஆட்சிப் பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகரராசில் இருக்கும் சூரியனைப் பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும் தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். இம்மாதத்தில் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாள் எனினும் முருகப்பெருமானுக்கே மிகச் சிறந்த நாளாகும் ஏனனெனின் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் மூலம் முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் பிறந்த தினம் என்பதும் சூரபத்மனை அழிப்பதற்காக பார்வதி தேவி முருகனுக்கு சக்தி வேல் கொடுத்த தினம் என்பதுவும் ஐதீகம்.
தைப்பூசம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, மொரிஷியஸ் என பல நாடுகளிலும் மிக விமர்சையாக கொண்டாப்படுகின்றது இலங்கையில் இத்தினத்தில் தான் புதிர் எடுப்பு என்னும் நிகழ்வு இடம்பெறுகின்றது. ஆதிகாலையில் எழுந்து வீடுவாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுப்பதற்கு அரிவாள், தேங்காய், கற்பூரம், கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவார். அதனை குடும்பத் தலைவி பொன், வெள்ளி, ஆகியவற்றுடன் சென்று வீட்டு வாசலில் வைத்து வாங்கிக்கொண்டு சுவாமி அறையில் வைத்து பூசை செய்த பின் அதில் இருந்து சில நெல் மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியை பசுப்பாலுடன் கலந்து வாழைப்பழத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்கு பரிமாறுவார். சிலர் அன்றைய தினம் வீட்டிலுள்ள அரிசியுடன் இவ்வரிசியையும் கலந்து பொங்கல் அல்லது சோறு சமைத்து உண்பார்கள்.
இவ்வாறு சிறப்பு மிக்க தைப்பூச விழாவானது இன்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு ஸ்நபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகி புதிர் எடுக்கும் நிகழ்வு, பூசைகள், அம்மன் உள்வீதி உலாவருதல் என்பன நடைபெற்றது. அதன் பின்னர் அடியார்களுக்கு பிரசாதத்துடன் நெற்கதிர்களும் வழங்கப்பட்டது.














