களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கூட்டம்

(Sayan & Varathan)  களுவாஞ்சிக்குடியில்  பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிராமத்தின் குறைபாடுகள் பற்றி ஆராயும் விசேட கூட்டம் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று   பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளர் திருமதி.பேரின்பமலர் மனோகரதாஸ் , ஆராய்ச்சி உத்தியோகத்தர் என்.சிவகுமாரன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கே.சுகுணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பிரதியமைச்சர்,  'ஒரு கிராமத்திற்கு 10 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம் மற்றும் விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போன்ற திட்டங்களின்மூலம் இவ்வாண்டில் இப் பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. இதில் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள், சமூக அபிவிருத்தி திட்டங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள்,சுகாதாரம்,கல்வி அபிவிருத்தி மற்றும் ஆலயங்கள் அபிவிருத்தி போன்றவற்றிற்கு நிதி செலவிடப்படவிருக்கின்றது.

மேலும், இவைகளைவிட விசேட அபிவிருத்திக்காக  வேலைத்திட்டங்களுக்கேற்ப நிதி ஒதுக்குவதற்கு நான் தயாராக உள்ளேன்.

இவ் அரசாங்கம் நமது பிரதேசங்களுக்கு பாரியளவு நிதியினை அபிவிருத்திக்காக வழங்கிக்கொண்டிருக்கின்றது. இதை எவரும் மறுத்துக் கூறமுடியாது'.

எனும் விடயங்கள் பற்றி உரையாற்றினார்.

இதன்போது கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிருவாகத்தினர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.