வித்துவான், தமிழ் ஒளி க.செபரெத்தினம் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி !!!

கனடாவில் 29.12.2013 அன்று காலமான வித்துவான், தமிழ் ஒளி க.செபரெத்தினம் ஐயா அவர்களுக்கு மட்/பட்டிருப்பு தேசியபாடசாலை, களுவாஞ்சிகுடியின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா
ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், பாடசாலை நலன் விரும்பிகள் அனைவரும் தமது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதுடன்  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கின்றனர்.


மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியிலேயே அன்னார் பதவி நிலை ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





மட்/ பட்டிருப்புத் தேசிய பாடசாலையின்
- 'பகலவனே' -
தமிழ் ஒளி வித்துவான் செபரெத்தினம் அண்ணலே!
நின் பூவுலக இழப்பைக் கேட்டு
எமது பாடசாலை கண்ணீர் வடிக்கிறது

ஓலமிட்டு அழுவதா இல்லை
ஒரு நிமிடம் உலகத்தை மறந்து விடுவதா
காலத்தின் மகுடமே ஐயா!
கற்பனைகள் ஓயவில்லை!

அன்றைய நின் சேவைக்காலங்கள்
இன்றைய நினைவுகளின் கண்ணீர் துளிகள்
ஓவ்வொன்றாய் எம் உள்ளக் கதவுகளை
உடைத்து காட்டுகிறது அண்ணலே!

சூறாவளி அனர்த்தம் நின் பதவிக்காலம்
சுழன்றது நின் சிந்தனைக் களம்
அன்புடைய அதிபராய் நின்று
ஆற்றிய பணிகள் ஆழப் பதிகிறது அண்ணலே!

சிம்மக் குரலோய் செந்தமிழின் தவப்புதல்வா!
செம்மொழிக்கு நின் தொண்டு சிகரத்தின் ஒளி விளக்கு
இலக்கண இலக்கியங்களுடன் என்றும் உறவாடியவனே!
கனடாவும் அழுகிறதோ தமிழ் காவலனைக்
காணவில்லையென்று.

இடிமுழங்கும் நின் இன்தமிழை
இனியென்று கேட்பதொன்றே குறை
மடியவில்லை நின் எழுத்துக்கள்
அவற்றுள்ளே வாழ்வாய் அறிவோம் நின் உயிரோவியத்தை

பட்டிருப்பு தேசிய பாடசாலை 
கண்ணீர் வடிக்குதையா
பகலவனாய் ஒளி தந்த
அதிபர் இழப்பை எண்ணி

' தோன்றிற் புகழொடு தோன்றுக' என்றாற்போல்
தோன்றிய தமிழ் செம்மலே நின்
மனிதம் தடம் பதித்திருக்கிறது
மறைந்தாலும் மண் மறவாது!