அல்லல்படும் தமிழ் மக்களுக்கு நல்லொளி வீசும் நாளாக இந்நாள் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - யோகேஸ்வரன் MP

(சூரியன்)

மலருகின்ற 2014ம் ஆண்டு தைமாத முதலாம் நாளான நன்நாளில் எம்நாட்டில் நீண்டகாலமாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் எம் உறவுகளான தமிழ் மக்களுக்கு இன்ப நல்லொளி வீசும் நாளாக இந்நாள் அமைய இறைவனை பிரார்த்தித்து இதயம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை இந்து தமிழ் மக்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்!

தேவர்களுக்கு ஒரு நாள், மனிதர்களுக்கு ஒரு வருடம். இதன் அடிப்படையில் தை மாதம் தொடக்கம் ஆனி மாத இறுதி வரையான ஆறு மாத காலம் உத்தராயண காலம், இது தேவர்களுக்கு பகல் காலம் ஆகும். ஆடி தொடக்கம் மார்கழி இறுதி வரையான ஆறு மாத காலம் தட்சணாயன காலமாகும். இது தேவர்களுக்கு இராக்காலம் ஆகும். உத்தராயண கால முதல் நாளே தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் உலகிற்கு உணவை உற்பத்தியாக்கி வழங்கும் உழவர் பெருமக்கள் உலக ஒளிக்கடவுளாகவும், உணவு சிறக்க உதவுபவருமாகிய கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடும் உழவர் திருநாளாக இந்நாளை கொண்டாடுகின்றனர்.

பொதுவாக தைப்பொங்கலுக்கு முதல் நாள் 'போகிப் பண்டிகை' என்ற வகையில் பழையவற்றை நீக்கிவிடும் பண்டிகையாக தமிழகத்தில் கொண்டாடுகின்றனர். தைப்பொங்கலுக்கு மறுநாள் பட்டிப் பொங்கல் என்ற வகையில் செல்வம் என்னும் பொருளைக் கொண்டு விளங்கும் 'மாடு' எனப்படும் கால் நடைகளுக்கு பூசை புரிந்து நன்றி உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

இப்பண்டிகை நாளில் உண்மையான இந்து தமிழர்கள் சைவ  உணவு உண்பதுடன் பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்து என்னும் போது 'ஹிம்சை' செய்யாதவர், பிற உயிர்களை நேசிப்பவர் என்ற வகையில் இந்து தர்மத்துடன் பகலவனை போற்றல் அவசியமாகும்.

அத்தோடு கேலிக்கை நிகழ்வுகளை தவிர்த்து சகல வழிகளிலும் துன்புறும் எம் தமிழ் இனத்தின் விடுதலைக்காக இறைவனை வேண்டி பிரார்த்திப்பதுடன், வறுமையாலும், தற்கால சூழலாலும், துன்புறும் எமது உறவுகளுக்கு இயன்றளவு ஆதரவுகளை வழங்கி அவர்களது முகத்திலும், அகத்திலும் மலரும் இன்ப நிலை கண்டு நாம் மகிழ்ச்சி அடையும் காலமாக இக்காலம் மலர எல்லோரும் இறைவனை பிராத்திக்குமாறு வேண்டுகிறேன்.

எனவே எமது இந்து தமிழர் வாழ்வின் இன்ப ஒளி மலர பிரார்த்தித்து நல்வாழ்த்தை  மகிழ்வாக தெரிவிக்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

(வ.சக்திவேல் 14.01.2014. 0776 279 436)