அம்பாரை ஓலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை!
(பேரின்பராஜா சபேஷ்)
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டம் ஓலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்ற போதிலும் இதுவரை துறைமுகப் பணிகள் எதுவும் நடைபெறாமை குறித்து பிரதேச மக்களால் கவலையும் விசனமும் வெளியிடப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் எந்தவொரு கப்பலும் இதுவரை நங்கூரப்படாத நிலையில் உலகில் கப்பலை காணாத துறைமுகமாக தமது பிரதேசத்திலுள்ள துறைமுகம் விளங்குவதாக உள்ளுர் மக்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
மறைந்த-ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம் . அஷ்ரப் சந்திரிகா குமாரனதுங்காவின் பதவிக் காலத்தில் துறைமுக அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மீன்பிடிதுறைமுகம் மற்றும் வர்த்தக துறை முகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
டென்மார்க் அரசாங்கத்தினால் 10 வருட கடன் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துறை முக வேலைகள் முடிவடைந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வர்த்தக மற்றும் மீன்பிடித்துறை முகங்களை உள்ளக்கிய ஒலுவில் துறைமுகம் திற்ந்து வைக்கப்பட்டது;.
மீன்பிடித்துறை துறைமுகத்தை பொறுத்தவரை மீன்பிடி படகுகள் அதில் நங்கூரமிடுவதால் சுறுசுறுப்புடன் காணப்பட்டாலும் வர்த்தக துறைமுகத்தை பொறுத்த வரை துறைமுகப் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் அங்கு இராணுவம் மற்றும் கடற்படையினரே தற்போது காணப்படுவதாக உள்ளுர் மக்கள் பிபிபிக்காக அங்கு சென்றிருந்த எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
தென்கிழக்கு மக்களின் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக அமையும் என்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த தங்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளதாகவும் அவா;களால் தெவிக்கப்படுகின்றது.
அதேவேளை துறைமுக அபிவிருத்தி பணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்ட ஈட்டு கொடுப்பணவு கூட காணி உரிமையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் துறைமுக அபிவிருத்தி அதிகார வாரியம் மீது குறித்த காணி உரிமையாளர்களினால் முன் வைக்கப்படுகின்றது.
தங்களது காணிகளின் பெறுமதி அரசாங்கத்தினால் ஆறு வருடங்களுக்கு முன்னதாக மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டும் அது இதுவரை தமது கைகளுக்கு கிடைக்க வில்லை என்ற அங்கலாய்ப்புடன் அவர்களில் பலரும் காணப்படுகின்றார்கள்.
துறைமுக திறப்பு விழாவின் பிரதேச அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒரு சிலருக்கு முதற்கொடுப்பணவு என கூறி வழங்கப்பட்ட தொகைக்குரிய காசோலை கூட பணக்கொடுப்பணவு நிறுத்தம் என குறிப்பிடப்பட்டு வங்கியினால் திருப்புி அனுப்பப்பட்டுள்ளது.இந்த காசோலைகளை ஜனாதிபதியே அவர்களிடம் வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.















