இந்து ஆலயங்கள் சமூகப் பணிகளுக்கும் உதவ முன்வர வேண்டும் - மாவட்ட உதவி அரச அதிபர் எஸ்.ரங்கநாதன்

(உ.உதயகாந்த்)

காலத்தின் தேவைகருதி இந்து ஆலயங்கள் சமூகப் பணிகளுக்காகவும் உதவ முன்வர வேண்டும் இதுவே காலத்தின் தேவையும் கட்டாயமுமாக இருக்கின்றதென கல்லடி விபுலானந்தா இந்துமாமன்ற அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா நிகழ்வானது நேற்றையதினம் மட்/ கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய கலையரங்கில் இடம்பெற்ற போது நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மட்டக்களப்பு மாவட்ட உதவி அரச அதிபர் எஸ்.ரங்கநாதன் சிறப்புரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் எமது ஆலயங்கள் நல்ல விழுமியங்களையும், இறைசிந்தையுள்ள சமூகத்தினையும் வளர்ப்பதில் மட்டும் நின்றுவிடாமல் சமூகம் சார்ந்த சிந்தனையுடனான சில வேலைத்திட்டங்களையும் ஆற்ற முன்வரவேண்டும் என்பதுடன் ஆசீர்வாதம் பெற நாங்கள் செல்லவேண்டிய பழமைவாய்ந்த ஆலயங்கள் சில இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களிலும் மாவட்ட செயலகம் மற்றும் நீதி துறையிடமும் நீதி கேட்டுநிற்பது  கவலைக்குரிய  விடயமாக இருக்கின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் எமது மத நிறுவனங்கள் சமாதானத்தினையும், ஆண்மீகத்தினையும் வலியுறுத்துபவைகளாக மாற வேண்டுமென்றும் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழா மற்றும் விஷேட நிகழ்வுகளின் போது ஆடம்பரங்களுக்கான (பட்டாசு, மின்விளக்கு அலங்காரம் , அளவுக்கு மீதமான பிரசாதங்கள்) செலவீனங்களை குறைக்கும் வண்ணம் செயற்பட்டு, மதங்கள் கூறும் உள்ளார்ந்த அர்த்தத்தினை செயற்படுத்துமுகமாக வசதி குறைந்த ஏழை மாணவர்களுக்கான கல்வித் தேவைகளை நிறைவுசெய்ய முன்வாருங்கள் என கூறி தனது உரையினை நிறைவுசெய்தார்.

இந் நிகழ்வானது கல்லடி விபுலானந்தா இந்துமாமன்ற அறநெறி பாடசாலையின் தலைவர்  க.ஞானசெல்வம் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வானது கல்லடி புதிய பாலத்தின் அருகாமையில் இருந்து சமய எழுச்சி ஊர்வலத்துடன் ஆரம்பமாகி விபுலானந்தா வித்தியாலயத்தினை வந்தடைந்ததினைத் தொடர்ந்து அருளாளராக கலந்து சிறப்பித்த வேதாந்தா ஆனந்தா சுவாமி ஜீயினால்  சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துமுகமாக பொங்கல் படைத்து  பூஜை நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.