மக்களுக்கு உதவும் இராணுவத்தினரை சம்பந்தன் வெளியேற்ற சொல்கின்றார் : கிழக்கில் அமைச்சர் வீரக்கோன்

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள  இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். ஆனால் இராணுவமோ அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கான பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகிறது என்று மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தெரிவித்தார்.

 வாகரை பிரதேசம் புணாணை கிழக்கில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். இராகுலநாயகி தலைமையில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 எமது அமைச்சினால்; 3 இலச்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கட்டுவதற்கான நிதி உதவி; வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் சம்பூர் போன்ற இடங்களில் இராணுவத்தினர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான  வீடுகளைக் கட்டிக் கொடுத்து மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

மக்களுக்காக ஒன்றிணைந்து வேலை செய்வோம் வாருங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றார்.