வாழைச்சேனை கடதாசி ஆலை நிலைமைகள் குறித்து யோகேஸ்வரன் mp அமைச்சர் தயாசிறித திசேராவுடன் சந்திப்பு


வாழைச்சேனை தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் நிலைமைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அரச வளங்கள் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறித திசேராவை புதன்கிழமை கொழும்பிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் சந்தித்துள்ளார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளின் பிரகாரம் விரைவாக கடதாசி கம்பனிக்கு வருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இத்தேசிய கடதாசி கம்பனியின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அண்மையில் தேசிய கடதாசி கம்பனி ஊழியர்களுக்கான கடந்த இரண்டு மாத ஊதியம் வழங்கப்படாமை குறித்தும், குறித்த காலங்களில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியும், இதுவரை காலமும் செலுத்தப்படாமல் நிலுவையாகவுள்ள EPF, ETF  கொடுப்பனவு சார்பாகவும், சுயவிருப்பத்தில் விலகிச் செல்பவர்கள் சார்பாகவும், கடதாசி ஆலையை கட்டி எழுப்புவது சார்பாகவும் அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார்.

இவ்வேளை ஒவ்வொரு மாதமும் சம்பளம் அந்தந்த மாதம் 25ம் திகதி கிடைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அந்த மாத இறுதியில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், கடதாசி கம்பனிக்கு ஒரு இயக்குனர் சபையை நியமிக்குமாறும் அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வேளை வாழைச்சேனைக் கடதாசிக் கம்பனியில் தொழில் புரியும் ஊழியர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கிய மகஜரில் உள்ள ஊழியர்கள் வங்கியில் பெற்ற கடன் தொகைக்கான மாதாந்த செலுத்துகைப் பணம் கழித்து அனுப்புதல், சம்பளத்தில் கழித்து எடுக்கப்படும் EPF, ETF இற்க்கான பணத்தையும் நிறுவனத்தால் வழங்கப்படும் பணத்தொகையும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்துதல், (EPF பெப்ரவரி 2012 தொடக்கம் ETF ஜனவரி 2013 தொடக்கம் இன்று வரை)

இதுவரை காலமும் செலுத்தப்படாமல் இருந்த EPF, ETF கொடுப்பனவு செலுத்தல் சார்பாகவும், 2008ம் ஆண்டு சுயவிருப்பில் சென்று நஷ்ட ஈட்டுத்தொகை தரப்படாமல் மீண்டும் வேலையில் சேர்ந்து கொண்டவர்களுக்கான 50வீத சம்பளம் முழுமையாக வழங்கப்படல் சார்பாகவும், மேலும் அவர்களுக்கான வருடாந்த சம்பள ஏற்றம் உட்பட்ட விடயங்கள் சார்பாகவும், உமியிலான செயற்பாட்டால் தொழிற்சாலை இயந்திரங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை சார்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெளிவுபடுத்தினார்.

அதுமட்டுமின்றி கடந்;த காலங்களில் வாழைச்சேனை கடதாசி கம்பனி அரசாங்கத்திற்கு பல வருமானங்களைக் ஈட்டிக் கொடுத்தது. கடந்த 97ம் ஆண்டுக்கு பின்னர் வீழ்ச்சி ஏற்பட்;டது எனவும், முன்பு கொழும்பு யூனியன் பிளேஸ் தலைமைக் காரியாலயம் இக்கடதாசி கம்பனியின் வருமானத்தில் கட்டப்பட்டது என்பதையும், அது பின்னர் 205 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டது என்பதையும், இதன் மூலம் வாழைச்சேனை கடதாசி கம்பனிக்கு எதுவும் வந்து சேரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இக் கடதாசி கம்பனியை ஒரு வெளிநாட்டு கம்பனிக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு மிக விரைவாக முயற்சிகள் மேற்கொள்ளவதாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை செவிமடுத்த அமைச்சர் இவற்றினை நிவர்;த்தி செய்வதற்கு இரண்டு வார காலம் அவகாசம் கேட்டுள்ளார். அத்தோடு ஊழியர்களுக்கு சம்பளத்தை தான் மிக விரைவாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர்கள் சங்கத்தின் காகித கம்பனி ஊழியர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்ட மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரிடம் கையளித்தார்.

அத்தோடு புதன்கிழமை வாழைச்சேனை கடதாசி கம்பனி ஊழியர்கள் சிலர் தம்மை வருகை தந்து சந்தித்ததாகவும் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.