உயிர்த்தியாகம் செய்த பொலிசாரின் 150 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

(சிவம் , ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
நாட்டின் சட்டம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை நிலைநிறுத்துவதற்காக உயிர்த்தியாகம் செய்த பொலிசாரின் 150 ஆவது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வளாகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ண தலைமையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்பு நினைவுத் தூபிக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மரணமடைந்த பொலிசாரின் உறவினர்கள் மலர்ச் செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இது வரையில் பல்வேறு பதவிகளில் உள்ள 3470 பொலிசார் மொத்தமாக உயிரிழந்துள்ளனர் இதில் கடந்த 30 வருடகால யுத்தத்pல் 2594 பேர் உயிரிழந்துள்ளதோடு 497 பேர் ஊனமுற்றுள்ளனர் என வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால்செனவிரத்தின தெரிவித்தார்.

1796 இல் பொலிஸ் நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு 1866 இல் முழுமையான அமுல்படுத்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்மன, களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரட்நாயக்கா, மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.