தமிழ் மக்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ் இளைஞர், யுவதிகள் இந் நாட்டில் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று கிழக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளை வேலை வாய்ப்பு வழங்கும் விடயத்தில் நன்கு திட்டமிட்டு புறுக்கணித்துள்ளமை தமிழ் மக்களை மீண்டுமொரு போராட்டத்திற்கு அறை கூவல் விடுப்பதாக உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணசபையினால் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வழங்கலில் தமிழ் இளைஞர், யுவதிகள் கூடிய புள்ளிகளை போட்டிப் பரீட்சையில் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனின் மக்கள் பணிமனையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அங்கு மேலும் பேசுகையில்:
கிழக்கு மாகாணசபை நன்கு திட்டமிட்ட முறையில் தமிழர்களை ஓரம் கட்டுவதில் குறியாகவுள்ளமை எதிர்காலத்தில் பாரிய இன முரண்பாடுகளை தோற்றுவிக்க வழிசமைக்கும்.
இன்று கிழக்கு மாகாணங்களில் கீழுள்ள முக்கியமான அலுவலயங்களில் பதவி வகித்த தமிழ் உயர் அதிகாரிகளை திட்டமிட்டபடி வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து விட்டு சர்வாதிகார ஆட்சியை கிழக்கு மாகாணசபை அரங்கேற்றி வருகின்றது.
தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்ற மூவின மக்களையும் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசார அடிப்படையில் அரச நியமனங்களை வழங்க வேண்டும். அவ்வாறே வளப் பங்கீடும் இடம்பெற வேண்டும். இதனையே நாம் எதிர் பார்கின்றோம். இதனை விடுத்து தமிழர்களை நன்கு திட்டமிட்ட முறையில் கிழக்கு மாகாணசபை புறக்கணிப்பதை கொடுங்கோள் ஆட்சி என்று கூறுவதை விடுத்து வேறுவழியில்லை.
போர் நிலவிய காலத்தில் பல்வேறு உயிர் இழப்புக்களையும் சொத்தழிவுகளையும் சந்தித்ததோடு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கும் இலக்காகி மனக்காயங்களுடன் நடைபிணமாகவுள்ள தமிழ் மக்களை மேலும் வதைக்க முற்படுவதை இறைவன் கூட சகிக்க மாட்டார்.
பல இடர்பாடுகளுக்கு மத்தியில் படித்து பட்டம் பெற்று அரச பதவியை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்று தமிழ் இளைஞர், யுவதிகளை ஓரம் கட்டிவிட்டு குறைவான புள்ளிகளை பெற்றவர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வழங்கப்பட்டமை எந்த வகையில் நீதியானது?
உண்மைகள் ஒருபோதும் உறங்கக்கூடாது என்பதற்காக நாம் இன்று எமது மக்களின் கல்வி உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அங்கு எமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எமது இனத்தை நசுக்க முற்படுபவர்களுக்கு என்றோ ஒரு நாள் இறை தண்டனை கிடைக்கும் என்றார்.












