ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து அம்பாறை, கல்முனையில் ஒரு குழு தமிழர்களை குழப்பும் நடவடிக்கையில்!

(தில்லை, நடனம்)
ஜெனிவா தீர்மானத்தினை எதிர்க்கும் நடவடிக்கையில் கல்முனையில் செயற்படும் ஒரு குழு 

தமிழர்களை குழப்பும்
நடவடிக்கையில்இறங்கியிருப்பதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றது என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அ.அமிர்தலிங்கம், அ.விஜயரெட்ணம், வி.கமலநாதன், சி.ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

இவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. 

எதிர்வரும் 9ம் திகதி ஒரு ஆர்ப்பாட்ட பேரணியை தமிழர்களை கொண்டு ஏமாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதில் தமிழ் மக்களை கலந்து கொள்ள வைப்பதற்காக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களையும், மகளிர் சங்கங்களையும் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களையும் அழைக்கும் பொருட்டு ஆங்காங்கே கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றார்கள். 

இவர்கள் முன்வைக்கும் விடயம் என்னவென்றால். கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு நாம் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஒரு பேரணியை நடாத்த வேண்டுமெனவும் இதில் கலந்து கொள்ளாதவர்களுக்கு அரச உதவி எதையும் பெற முடியாது எனவும் எச்சரிக்கை தொனியுடன் பேசி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 

இம்முறை கொண்டுவரப்படவுள்ள ஜெனிவாத் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் உடையது என ஆய்வாரள்களும் ஊடகங்களும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்வதன் உள்நோக்கம் என்ன என்பதனை உண்மையான தமிழன் ஒவ்வொருவாரும் சிந்திக்க வேண்டும். 

ஜெனிவா தீர்மானம் நிறைவேறவுள்ள இந்த நேரத்தில் இப்படி தமிழ் மக்களை பேரணியான பிரச்சார மூலம் ஒன்றிணைத்து அதை ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக பிரயோகிக்க எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து தமிழர்களுக்கு கிடைக்க இருக்கும் தீர்வு விடயத்தில் ஒற்றுமையாக இருந்து செயற்பட முன்வரவேண்டும். 

இப்படியான போலி பிரசாரங்களை நம்பி தமிழர்கள் வீதிகளில் இறங்க வேண்டாமெனவும், இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜெனிவா கூட்டத் தொடர் முடியும் வரை தமிழ் மக்கள் எந்த கூட்டங்களிலோ, ஆர்ப்பாட்டங்களிலோ, பேரணிகளிலோ கலந்து கொள்வதை தவிர்க்குமாறு தமிழ் மக்களிடம் அன்பாய் கேட்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.