பாடசாலை நிகழ்வுகளை அரசியல் களங்களாகப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல - இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளை அரசியல் களங்களாகப் பயன்படுத்துவது ஆரோக்கியமான கல்விச் சூழலுக்குப் பொருத்தமானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் மாணவர்கள் மத்தியில் மாற்றுக் கட்சியினரை தாக்கிப் பேசுவதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
'பாடசாலை நிகழ்வுகளுக்கு பதவியிலிருக்கும் அரசியல்வாதிகள் அழைக்கப்பட்டால் குறித்த அரசியல்வாதி கலந்துகொள்ள வேண்டும் அவர் கலந்துகொள்ள முடியாதபட்சத்தில் தன்னுடைய வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைக்க வேண்டும் அது ஒரு மரவுவழி முறையாகும். அதற்காக அவரது கட்சி சார்ந்த உறுப்பினர்களை தனக்குப் பதிலாக அனுப்புவது ஒரு பொருத்தமான செயல் அல்ல.
அரசியல்வாதிகளின் பதவிக்காக வழங்கப்படும் கௌரவமாகவே அதிதிகளாக அழைக்கப்படுகின்றர்களே தவிர தனிப்பட்ட அரசியல்வாதியாக அழைக்கப்படவில்லை.

அரசியல்வாதிகளின் பிரதிநிதிகளாக வருபவர்கள் பாடசாலை நிகழ்வுகளில் அரசியல் பேசுகிறார்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதிகள் பிரதிநிதிகளை அனுப்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் பேசுவதற்கு பொது மேடைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில் மாற்றுக் கட்சியினரை தாக்கிப் பேசுவது தவறு அதனை இலங்கை ஆசிரியர் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் பாடசாலை நிகழ்வுகளில் சனநாயக மரபுகளுக்கு முரணாக கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வதோடு கல்வி தொடர்பாகவும் பிரதேச பர்சாலைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் கவனம்செலுத்தாது கடசியின் மீது வசைபாடும் களங்களாகப் பாடசாலைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு சில கல்வி அதிகாரிகள் உடந்தையாகவுள்ளனர்.
நாட்டில் ஆசிரியர் மாணவர் மற்றும் சமூக தொடர்பு மேம்பாட்டிற்காக பல்வேறான சமூக பங்களிப்பை தீவிரப்படுத்துவதன் மூலம் சமூகத்தின் தேவைகளுக்கு பாடசாலை மிகவும் இசைவுடையதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் வேளை அவ்வாறான அரசியல் பேச்சுகளினால் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இம்முரண்பாடுகள் அதிபர் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையிலும் ஏற்பட்டிருப்பதோடு கட்சி உறுப்பினர்களால் பாடசாலைகள் வன்முறை கலாசாரமாக மாற்றியமைக்கப்படுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாகவும் ஆசிரியர்களின் ஒழுக்க சட்டத் தொகுப்பு தொடர்பாகவும் மாணவர்களின் உளம் சார்ந்த செயற்பாடுகளுக்கு முரணாகவும் மக்களால் தெரிவு செய்யப்படாத கட்சி உறுப்பினர்கள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் மாணவர்களிடையே அரசியல் கலாசாரத்தை புகுத்தி மாணவர்களின் கல்வி உரிமையை சீர்குலைப்பதற்கும் இப்பிரச்சார நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாடசாலைகளும் தனித்துவமான கலாசாரத்த்துக்கு உரிமை கோருவதற்கும் சனநாயக கட்டமைப்பை உயர்வாகப் பேணுவதற்கும் உரிமை கொண்டுள்ள நிலையில் இவ்வாறான பாடசாலை நிகழ்வுகளில் மாணவர்களின் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கேள்ளிக்குறியாகியுள்ளது. இச்செயற்பாட்டினை செயற்பாட்டினை அரசியல் கட்சி உறுப்பினர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.